ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. டிராபிக் குறையுமா?
தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலைப் பணிகள் அனைத்தையும் 2025 மார்ச் இறுதிக்குள்ளும் கிழக்குக் கடற்கரை சாலை அகலப்படுத்தும் பணியினை 2025 மார்ச் மாதத்திற்குள்ளும் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெருநகர அலகின் மூலம் ரூ.50 கோடிக்கு மேல் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப்பணிகள் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (22.11.2024) கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் இறங்கிய அமைச்சர்:
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், சாலை மேம்பாலங்கள், கீழ்ப்பாலங்கள், கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாயினை கடப்பதற்குத் தேவையான பாலங்கள், ரயில்வே கடவு பாலங்கள் தேவைப்படுகின்றன.
இவற்றின் சில பணிகள் நெடுஞ்சாலைத்துறை சென்னை பெருநகர அலகினால் செயலாக்கப்பட்டு வருகின்றன. ரூ.50 கோடிக்கு மேல் உள்ள 16 பணிகளின் மொத்த மதிப்பு ரூ.2375 கோடி. இதற்கான நில எடுப்பு பணிகள் அனைத்தும் துவங்கப் பெற்று பல்வேறு நிலைகளில் உள்ளன.
நில எடுப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டால் பல்வேறு திட்டப் பணிகள் செயலாக்கத்திற்கு வந்து சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் என்பதை குறிப்பிட்ட அமைச்சர் வருவாய்த்துறை மற்றும் நில எடுப்பு அலுவலர்கள் உதவியுடன் இப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ECR அகலப்படுத்தும் பணி:
இது தவிர பெருங்களத்தூர் ரயில்வே பாலப் பணியில் உள்ள மீதமுள்ள பணிகள் வனத்துறை, மின்சார வாரியம் அனுமதிகளைப் பெற்று துவங்க வேண்டும் என்றும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலைப் பணிகள் அனைத்தையும் 2025 மார்ச் இறுதிக்குள்ளும் கிழக்குக் கடற்கரை சாலை அகலப்படுத்தும் பணியினையும் 2025 மார்ச் மாதத்திற்குள்ளும் மத்திய கைலாஷ் சந்திப்பில் உள்ள பல்வழிச் சாலை மேம்பாலத்தினை 2025 மே மாதத்திலும், பாடி அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தை 2025 டிசம்பர் இறுதிக்குள்ளும், குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப் பாலம் இன்னும் நிறைவு பெறவில்லை.
இப்பணியை டிசம்பர் 2024 முடிக்க வேண்டும் என்றும், வேப்பம்பட்டு மற்றும் விம்கோ நகர் ரயில்வே மேம்பாலப் பணி, மடிப்பாக்கம் சுரங்கப் பாலம், கொட்டிவாக்கம் கிராமத்தில் சாலையை அகலப்படுத்தும் பணி போன்ற அனைத்துப் பணிகளையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து பொறியாளர்களுக்கும், ஓப்பந்ததாரர்களுக்கும் விரைந்து முடிக்க நிர்ணயிக்கப்பட்டு உள்ள காலக் கெடுவிற்குள் அனைத்து பணிகளையும் தரமுடன் செயலாக்கிட வேண்டும் என்று அமைச்சர் உத்திரவிட்டார்.
இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் சிலரையும் பங்கேற்க செய்து அவர்களுடைய கருத்தினையும் கேட்டறிந்து, சாலைப் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் பணிகளில் ஏற்படும் இடர்பாடுகளை களைந்து பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் தரமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வருவதற்கு, பிற சேவை துறைகளான வருவாய்த்துறை, மின்சாரத்துறை, சென்னை குடிநீர் வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையின் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் உரிய காலத்திற்குள் சாலை மற்றும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் உரிய அறிவுரைகளை வழங்கினார்.