TN Covid 19 Vaccination : அனைத்து கைதிகளுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி - அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பது, ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மத்தியில், பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதற்கான விழிப்புணர்வு பணியிலும் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் முகாமை இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கொரோனா தொற்று காலத்தில் சிறைத்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்பையும் தமிழக அரசு உறுதி செய்யும். சிறையில் உள்ள கைதிகளில் பரோலில் விடுவிப்பதற்கு தகுதி படைத்த கைதிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், தீவிரவாதச் செயல்கள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை பரோலில் விடுவிப்பதற்கு வாய்ப்பு இல்லை. சிறைச்சாலைகளில் 57 சதவீத கைதிகளே உள்ளனர்.
கொரோனா காலத்தில் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் இதுவரை 1,700 பேர் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும், சிறைகளில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சிறைகளில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனா காலத்தில் சிறைகளில் மருத்துவ பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள் உரிய முறையில் நிரப்பப்பட்டு, கைதிகளுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சிறைகளுக்குள் சட்டவிரோதப் பொருட்கள் கொண்டு செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, வீடுகளில் இருப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மட்டுமின்றி சிறைச்சாலையில் இருப்பவர்களுக்கும் கொரோனா பாதிப்பு சில இடங்களில் ஏற்பட்டு வருகிறது. இதனால், சிறையில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறைக்கைதிகள் மத்தியில் கொரோனா வைரஸ் குறித்தும், தடுப்பூசிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க யார் இந்த பூர்ணலிங்கம்? கொரோனா தடுப்புக்கு ஏன் பெஸ்ட் சாய்ஸ் ?