Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025 Palani Murugan Temple: தைப்பூச நன்னாளை முன்னிட்டு பழனியில் பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Thaipusam 2025 Palani Murugan Temple: தைப்பூசம் இன்று உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, பழனியில் கடந்த சில நாட்களாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பழனி பஞ்சாமிர்தம்:
பழனி என்றாலே அனைவரது நினைவுக்கும் முருகனுக்கு அடுத்தபடியாக வருவது பஞ்சாமிர்தம். பழனி முருகனின் பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ள நிலையில் தேவாஸ்தானத்திற்கு சொந்தமான பஞ்சாமிர்த கடைகளில் போதியளவு இருப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
தட்டுப்பாடு:
பழனியிலே பஞ்சாமிர்த தட்டுப்பாடு என்ற தகவல் பக்தர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.எதிர்பார்த்ததை விட அதிகளவு பக்தர்கள் குவிந்துள்ளதால் பஞ்சாமிர்தம் விரைவாகவே விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், மலையடிவாரத்தில் உள்ள தனியார் கடைகளில் பக்தர்கள் பஞ்சாமிர்தம் வாங்கும் சூழலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பழனி முருகனை தரிசித்த பக்தர்கள் சிலர் தேவாஸ்தானத்திற்கு சொந்தமான கடைகளில் பஞ்சாமிர்தம் கிடைக்காததால் தனியார் கடைகளில் வாங்கிச் செல்கின்றனர். இந்த விவகாரம் தாெடர்பாக தேவஸ்தானம் சார்பிலோ, இந்து சமய அறநிலையத்துறை சார்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், பஞ்சாமிர்த தட்டுப்பாட்டைத் தீர்க்க தொடர்ந்து பஞ்சாமிர்த தயாரிப்பு பணிகளை முடுக்கிவிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அறுபடை வீடுகளிலே மிக மிக முக்கியமான வீடாக திகழ்வது பழனி ஆகும். வழக்கமாகவே பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் பழனியில் முருகனுக்கு உகந்த நாளில் வழக்ககத்தை விட பன்மடங்கு பக்தர்கள் கூட்டம் காணப்படும்.
லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்:
தைப்பூசத் திருவிழா கடந்த 5ம் தேதி பழனியில் கொடியேற்றப்பட்டது முதலே அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இந்த நிலையில் தைப்பூசம் இன்று என்பதால் நேற்று முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். லட்சக்கணக்கில் பக்தர்கள் காலை முதல் குவிந்து வரும் நிலையில் பஞ்சாமிர்த விற்பனையும் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.
பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி என விதவிதமான காவடிகள் எடுத்து வருகின்றனர். மேலும் பல அடி நீளமுள்ள அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மேலும், காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். முருகனுக்கு காலை முதல் பழங்கள், பூக்கள், திருநீறைக் கொண்டு தொடர்ந்து அபிஷேகங்களும், அர்ச்சனைகளும் நடந்து வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக நேற்று முதல் இலவச பேருந்துகளும் பழனியில் இயக்கப்பட்டு வருகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

