வெப்ப அலையை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு: என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் ?
வெப்ப அலையை எதிர்கொள்ள, ஓ.ஆர்.எஸ் கரைசல் , மருத்துவ வசதிகள் அளிக்க பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், வெப்ப அலையால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை மாற்றம்:
சமீப காலமாக, காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது, சில இடங்களில் வறட்சியான வானிலையால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது.
மேலும், பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் உயருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதனால், சில தீவுகளும் நீருக்குள் மூழ்குவதையும் பார்க்க முடிகிறது.
இந்த தருணத்தில், காலநிலை மாற்றத்தை தடுக்க, வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஈடுபடுவது கட்டாயமாகும்.
வெப்ப அலை:
மேலும், சமீப காலங்களில் வெப்ப அதிகரிப்பானது அதிகரித்து வரும் நிலையில் , பொதுமக்களும் வெப்ப அலையில் சிக்கி பாதிப்புக்கு உள்ளாவதை பார்க்க முடிகிறது. மேலும், சில இடங்களில் மக்கள் உயிரிழப்பும் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.
சில தினங்களுக்கு முன்புகூட , சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சியானது நடைபெற்றது. அன்றைய தினத்தில் கடும் வெப்பத்தால் , பலரும் மயக்கமடைந்தனர், 5 பேர் உயிரிழந்தனர். இதற்கு வெப்ப அலையும் முக்கிய காரணமாக கூறப்பட்டது.
நேற்றைய தினம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக கழக மாநாட்டில்கூட , வெப்பத்தின் காரணமாக பலர் மயக்கமடைந்தனர்.
மாநில பேரிடர்:
இந்த தருணத்தில், வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலையில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிற பேரிடர்களைப் போலவே, மாநில பேரிடர் நிதியை வெப்ப அலை தொடர்பான பாதிப்பிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெப்ப அலையை எதிர்கொள்ள, ஓ.ஆர்.எஸ் கரைசல், மருத்துவ வசதிகள் அளிக்க பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தண்ணீர் பந்தல் அமைக்கவும் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

