Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Anna Univ Case: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன், மேலும் குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Anna Univ Case: வில்லா மாதிரியான வீடுகளில் கொள்ளையடித்ததாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஞானசேகரன் கைதாகியுள்ளார்.
அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து அங்கு இருந்த மாணவியிடம், ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியது. எதிக்கட்சிகளும் அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கின. இதனிடையே, தீவிர விசாரணைக்குப் பிறகு, ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த செல்போனை கைப்பற்றியும் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, அவர் வேறு சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது. இந்த வழக்கை சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. அந்த வகையில் 3 நாட்களில் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் 7 வழக்குகளில் கைது
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளைடியத்துச் சென்றதாக, போலீசாரின் விசாரணையில் ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில் மேலும் 7 வழக்குகளை பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அந்த சம்பவங்களில் அவர் 200 சவரன் வரை நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. அந்த நகைகளை விற்ற பணத்தில் தான் சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வழக்குகளில் அவர் வேறு எங்காவது கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்து சிறப்பு விசாரணைக் குழு ஆராய்ந்து வருகிறது.
குண்டர் சட்டம்:
ஏற்கனவே சிறப்பு விசாரணைக்குழுவின் பரிந்துரையின் பேரில், ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, ஞானசேகரன் சில நபர்களிடம் நடத்திய உரையாடலை உறுதிப்படுத்த குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. காரணம், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தபோது, அவர் யாருடனோ தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது யாரையோ சார் என குறிப்பிட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.





















