ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
பிராட்வேயில் ஒருங்கிணைந்த மல்டி-மாடல் வளாகக் கட்டிடத்தைக் கட்டுவதற்கு வசதியாக பிராட்வே பேருந்து முனையத்தை ராயபுரத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

பயணங்களைக் குறைக்க பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரத்திற்கு இடமாற்றம் செய்ய மாநகர போக்குவரத்து கழகத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.
பிராட்வேயில் ஒருங்கிணைந்த மல்டி-மாடல் வளாகக் கட்டிடத்தைக் கட்டுவதற்கு வசதியாக பிராட்வே பேருந்து முனையத்தை ராயபுரத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பயணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், “பிராட்வே பேருந்து முனையத்திலிருந்து தினமும் 162 வழித்தடங்களில் 840 பேருந்து தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் தாம்பரம், கிண்டி, எண்ணூர், திருவொற்றியூர், திருவான்மியூர், கோவளம், அண்ணாநகர், பூந்தமல்லி ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில், நகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலிருந்து வரும் 400 முதல் 450 பேருந்துகள், ராயபுரத்திற்கு மாற்றப்படும்.
மீதமுள்ள சேவைகள் அண்ணா சதுக்கம், சென்னை சென்ட்ரல் மற்றும் ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஒவ்வொரு பேருந்தும் ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு பயணங்களை மேற்கொள்கிறது. ஆனால் இடமாற்றத்திற்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கின்றனர்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பழமையான பேருந்து நிலையங்களில் ஒன்று பிராட்வே. தற்போது ஒவ்வொரு நாளும் சுமார் 5,100 ட்ரிப்புகள் வருவதும் போவதுமாக உள்ளன.
தற்காலிக பேருந்து நிலையமான ராயபுரம் பிராட்வேயிலிருந்து சுமார் 1.7 கி.மீ தொலைவில் உள்ளது, அதே நேரத்தில் அண்ணா சதுக்கம் மற்றும் ஃபோர்ஷோர் எஸ்டேட் போன்ற அருகிலுள்ள பிற பேருந்து நிலையங்கள் முறையே 3 கி.மீ மற்றும் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.
அதிகாரி ஒருவர் கூறுகையில், "ராயபுரத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பேருந்துகளை நிறுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம். நகரின் வடக்குப் பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகளை அண்ணா சதுக்கம் அல்லது ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை நீட்டிக்கலாம். இதனால் இந்தப் பகுதிகளில் பயணிகளுக்கு சேவைகள் அதிகரிக்கும். பிராட்வே மற்றும் பிற முக்கிய பகுதிகளுக்கான இணைப்பைப் பராமரிக்க சிறிய பாதை மாற்றங்கள் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்த இடமாற்றம் ஏப்ரல் மாதத்தில் தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது. சராசரியாக, பிராட்வே முனையம் ஒவ்வொரு நாளும் 2.2 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்கிறது.
இதற்கிடையில், சென்னை துறைமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் ராயபுரத்தில் புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
சாலைகள், நடைமேடைகள், தங்குமிடங்கள், கழிப்பறைகள், பணியாளர்கள் ஓய்வு பகுதி ஆகிய வசதிகளும் இதில் உள்ளது. தற்காலிக பேருந்து நிலையத்தில் ஒரு நேரக் கண்காணிப்பாளர் அறை, ஒரு பாலூட்டும் அறை, நான்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் பிற வசதிகளும் உள்ளன.
பிராட்வேயில் வரவிருக்கும் மல்டி மாடல் கட்டிடத்தில் இரண்டு பெஸ்மெண்ட் தளங்களும் பேருந்து நிலையத்திற்காக இரண்டு தளங்களும் வணிக நிறுவனங்களுக்கு ஆறு தளங்களும் வர இருக்கின்றன. இந்த திட்டம் ரூ.822 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் மூன்று ஆண்டுகளில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

