நடைபாதையில் கொட்டப்பட்ட ஆவின் பால்.. கொதிக்கும் பால்முகவர்கள் சங்கம்!
சாலையில் பால் கொட்டப்படுவதற்கு ஆவின் நிர்வாகத்தின் சீர்கேடுதான் முழுக்காரணம் என்று தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பால் விற்பனை மற்றும் பால் சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனைக்காக தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருவது ஆவின்நிர்வாகம். தமிழ்நாட்டில் ஆவின் பாலை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆவின் நிர்வாகமும் பாலை பதப்படுத்தி பல்வேறு வகைகளில் விற்பனை செயது வருகிறது. இந்த நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் சாலை ஒன்றின் பிளாட்பாரத்தில் கேட்பாரற்ற நிலையில் வீசப்பட்டு இருந்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. மழை வெள்ளத்தால் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு அவதிப்பட்டு வரும் சூழலில், ஆவின் பால் பாக்கெட்டுகள் சாலையில் வீசப்பட்டிருப்பதை கண்டு பலரும் வேதனையுற்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“மாதாந்திர அட்டை மூலம் ஆவின் பால் வாங்கிட முன் பணம் செலுத்திய மக்களுக்கு வழங்குவதற்காக, ஒப்பந்த வாகனங்களில் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டப்புகள் மூலம் சம்பந்தப்பட்ட பூத்துகளுக்கு தினசரி அதிகாலையில் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆவினில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் சம்பந்தப்பட்ட பூத்துகளில் பணியமர்த்தப்பட்டு பாலினை விநியோகம் செய்யும் வேலையை ஆவின் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு பணியில் இருக்கும் ஊழியர்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் நுகர்வோர் பாலினை வாங்க வேண்டும்.
மேலும் படிக்க : மழை முகாமில் ஒரு வயது குழந்தைக்கு "ஹேப்பி பர்த்டே" சர்ப்ரைஸ் கேக் வெட்டிய போலீசார்.!
சம்பந்தப்பட்ட பூத்துகளில் ஒப்பந்த வாகனங்கள் மூலம் இறக்கப்பட்ட ஆவின் பாலினை ஒரு மணி நேரத்திற்குள் காலி செய்து விட வேண்டும். இல்லையேல் வாகன ஓட்டிகள் தயவுதாட்சன்யம் பாராமல் நடைபாதையிலேயே கொட்டி விட்டு சென்று விடுவர். இதற்கு ஆவின் நிறுவனத்தின் நிர்வாக சீர்கேடுதான் முழுக்காரணமாகும்.
ஆவின் பூத்துகளில் பால் விநியோகம் செய்யப்படுவதை முறையாக கண்காணிக்காமலும், பால் விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்புகளை பற்றாக்குறையோடு வைத்துக் கொண்டு பெயரளவில் நித்தமும் வெற்று அறிக்கைகளை மட்டுமே ஆவின் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : Today Headlines | தத்தளிக்கும் சென்னை .... பல மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... சில முக்கியச் செய்திகள்!
சென்னை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்தும் ஆவின் பாலையே பெரிதும் நம்பியுள்ளன. விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் பலரும் நேரடியாக தங்களிடம் உள்ள பாலை ஆவின் நிர்வாகத்திடம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த சூழலில், சாலையில் பாலை வீணாக கொட்டுவது என்பது விவசாயிகள், பால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்