விளாத்திகுளம் சிறுமி கொலை: துரத்தப்பட்ட கனிமொழி? அதிமுக கொந்தளிப்பு! திமுவுக்கு எதிராக போராட்டம்!
தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய திமுக அரசுக்கு முடிவுரை கட்ட வரும் 17.03.2026 அன்று மாபெரும் போராட்டம்- ஈபிஎஸ்

தூத்துக்குடி அருகே விளாத்திகுளத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் காணவில்லை என்று புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றபோது, காவல் ஆய்வாளர் அவதூறாகப் பேசியதும் சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில், இதுகுறித்து அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை அதிமுக ஒலித்து வருகிறது.
கனிமொழியை விரட்டி அனுப்பிய மக்கள்
களத்தில் உறவினர்கள் - ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, பொம்மை முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழியை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி!
இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம் ஸ்டாலின் அவர்களே? காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா? இது இத்தோடு நிற்கப் போவது இல்லை.
மார்ச் 17-ல் மாபெரும் போராட்டம்
வரும் 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
#தூத்துக்குடி_Nirbhaya -விற்கு உரிய நீதி கிடைப்பதை அஇஅதிமுக உறுதி செய்யும்! விரைவில் அமையப்போகும் அதிமுக அரசு, எப்படி ஜெயலலிதா தாய் போல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
























