MK Stalin: கொரோனாவுக்குப்பின் முதல் நேரடி ஆலோசனை! மீண்டும் வழக்கமான பணியில் முதல்வர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிற்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அடுத்த சில நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சூழலில் கடந்த 18ஆம் தேதி இவர் குணம் அடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தார். அதைத் தொடர்ந்து அவர் எந்தவித பொது நிகழ்வுகளிலும் நேரடியாக கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் தொற்றிலிருந்து மீண்ட பிறகு முதல் முறையாக நேரடியாக தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் 2022-2023 நிதியாண்டிற்கான மாநிலத்தின் வருவாய் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாராஜன், அமைச்சர் துறைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இடம்பெற்று இருந்தனர்.
#CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/D0rLhNcToJ
— TN DIPR (@TNDIPRNEWS) July 22, 2022
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்ட சில முக்கியமானவை தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெற செஸ் ஒலிம்பியாட் ஆயத்த பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18ஆம் தேதி காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து நேரடியாக வீட்டுக்கு செல்லாமல் தலைமைச் செயலகம் சென்ற அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து காணொளி மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்தச் சூழலில் தற்போது கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக நேரடியாக அதிகாரிகளை சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















