ஆளுநர் உரை: பழசா... புதுசா... தினுசா...? எடை போடும் பார்வை!
இதுவரையிலான ஆளுநர் உரைகளைப் போலவே, ஆகா ஓகோவென வழக்கமான அம்சங்கள் இருந்தாலும், ரொம்பவும் தூக்கலாக இல்லை என்று கூறமுடியும். அத்துடன் இதுவரை இல்லாத ஆட்சியியல் தன்மைகள் இந்த ஆளுநர் உரையில் தலையெடுத்துள்ளன.
ஒருவர் தன் வீட்டைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிகூடத் தெரியாதபோதும், அரசாங்கத்தின் கொள்கையையும் திட்டங்களையும் பற்றி உரையாற்றலாம் என்றால், அவர் ஆளுநராக ஆகிவிட்டால் போதும் என கடுமையான விமர்சனம், ஆட்சியியல் துறையில் இன்றும் உண்டு. அதை மறுப்பதற்கில்லாதபடிதான் நாட்டில் ஆளுநர் பதவி நியமனங்கள் நடந்துவருகின்றன். சங்பரிவார் எனப்படும் அரசியல் பின்னணியிலிருந்து வந்த பன்வாரி லால் புரோகித்தின் வாயால், மாநில சுயாட்சி உரிமை தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் ஒலித்திருக்குமா என்பது மெய்யாகவே பெரிய கேள்விதான்!
அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அவர் வாசித்த திமுக அரசாங்கத்தின் கொள்கை, திட்டங்களைக் கொண்ட உரையில் என்னதான் இருக்கிறது?
புதுசும் தினுசும்
இதுவரையிலான ஆளுநர் உரைகளைப் போலவே, ஆகா ஓகோவென வழக்கமான அம்சங்கள் இருந்தாலும், ரொம்பவும் தூக்கலாக இல்லை என்று கூறமுடியும். அத்துடன் இதுவரை இல்லாத ஆட்சியியல் தன்மைகள் இந்த ஆளுநர் உரையில் தலையெடுத்துள்ளன. புதிய திட்டம், நவீன திட்டம், ஆட்சியாளர்களுக்குப் பிடித்த வாசகங்கள் என்கிறபடி இல்லாமல், ஓர் அரசாங்கம் இயல்பாகவே தன் கொள்கையாக வைத்திருக்கவேண்டிய சங்கதிகளை ஆங்காங்கே நறுக்சுருக்கென தூவிவிட்டிருக்கிறார்கள். (தீயா வேலை செஞ்சிருக்காய்ங்க, குமாருகள்..!)
உலகமே பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் சக்திகளும் வளர்ந்துள்ளநிலையில், ” சாதி மதப் பிரச்னை இல்லாத அமைதியான, இணக்கமான சமூகச் சூழல் என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு முற்றிலும் இன்றியமையாதது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சமத்துவத்தையும் நீதியையும் இந்த அரசு உறுதிப்படுத்தும்.” என்று குறிப்பிடப்பட்டு இருப்பது காலத்தின் தேவை.
இன்றைக்கும் வன்கொடுமைகள் தொடர்ந்தாலும் தீண்டாமை குறித்து பள்ளிப் பாடப்புத்தகங்களில் பொட்டில் அடித்தாற்போல அரசு எடுத்துச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது. அதே நிலைப்பாட்டை, அரசாங்கத்தின் கொள்கை ஆவணத்திலும் இடம்பெற்றுள்ளது என்றால், அதற்கான சமூகத் தேவை எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
அரசாங்கம் நன்றாகச் செயல்படுகிறது என்றால், அதன் பணிகள் எல்லாம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் சரியாகவும் நடைபெறவேண்டும். சராசரிக் குடிமக்கள் முதல் ஆட்சியியல் வல்லுநர்கள்வரை இதைத்தான் அளவுகோலாகப் பார்ப்பார்கள். திமுகவின் பிரபல வாசகமான ’சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்பதுகூட இதையொட்டி வந்திருக்கமுடியும். அதாவது சொல்வது செய்வதற்காகவே; ஏனென்றால், அது அரசாங்கத்தின் கடமை. இதை அரசாங்கத்தின் பொறுப்புடைமை என உயர்தரமாகவும் சொல்லலாம். ”அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் குடிமக்களுக்கு முழுமையாகப் பலனளிப்பதை இந்த அரசு உறுதிசெய்யும்; அதற்காக, இப்போதைய நடைமுறைகளையும் செயல்பாடுகளையும் எளிமையாக்கப்படும்; அரசாங்கத்தின் பொறுப்புடைமையை தக்கவைக்கவும் மேம்படுத்துவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் குறிப்பிடப்பட்டிருப்பது, ஆட்சியின் மேம்பட்ட இலக்கை உணர்த்துகிறது. உரையின் 20ஆவது, 21ஆவது குறிப்புகளில் அடுத்தடுத்து அரசாங்கத்தின் ’பொறுப்புடைமை’ என்பது அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில அரசியலில் ஆண்ட கட்சி, ஆளும் கட்சி, மற்ற பல அரசியல் கட்சிகளையும் தாண்டி பல குடிமக்கள் உரிமைக் குழுக்கள் புதியதாக உருவாகி, அவற்றின் குரல் ஏற்படுத்திய தாக்கம் என்பதாகவும் இதை எடுத்துக்கொள்ள முடியும்.
இதன் தொடர்ச்சியாக, “ பல்வேறு அரசு அமைப்புகளால் வழங்கப்படும் பொதுச்சேவைகளை முறைப்படுத்த ‘சேவைகள் உரிமைச் சட்டம்’ அறிமுகப்படுத்தப்படும்’ என அரசு அறிவித்திருப்பது, இந்த ஆளுநர் உரையின் மிக முக்கியமான ஒரு அம்சம்.
சில பத்தாண்டுகளாக இந்த நாட்டில் பேசப்படும் வளர்ச்சி, வளர்ச்சித் திட்டங்கள் ஆகிய வார்த்தைகளில், பல நியாயங்களும் உரிமைக்குரல்களும் அடிபட்டுவிடுகின்றன என்கிற உரிமை மறுக்கப்பட்ட நீதிக்கான குரல்கள் வலுவாகி வருகின்றன. நாட்டின் வளர்ச்சியோ ஒரு மாநிலத்தின் வளர்ச்சியோ எதுவாக இருந்தாலும் யாரையும் புறக்கணிக்காமல் இருக்கவேண்டும் என்பதுதானே நாகரிக உலகத்தின் நியாயமாக இருக்கும் என்பதை, அரசாங்கத்தின் கொள்கையாக இந்த உரையில் இடம்பெறச் செய்திருப்பது, முன்னெப்போதும் இல்லாத சாரமான கவனப்படுத்தப்பட்டு உள்ள சங்கதி ஆகும். “பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இடைவெளிகளும் அதிக அளவில் இருக்கும்போது சமூகநீதி சாத்தியம் அல்ல. எனவே, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே இந்த அரசின் முழு நோக்கம்.”என உரைக்கும்படியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
நாம் வாழும் இந்தக் காலகட்டம், மனித வரலாற்றில் முக்கியமான ஒரு கட்டம்... (இப்படித்தான் அவரவர் வாழும் காலத்தை எல்லாரும் சொல்லிக்கொள்கிறார்கள் என காதில் ஒலிக்கிறது.. வேறு என்ன செய்ய.. நாமும் சொல்லிக்கொள்வோம்.) இந்த சகாப்தம், தகவல் யுகத்தின் சகாப்தம். இப்போது எல்லாமே தகவல்தான், தரவுகள்தான்.. உலகமே டேட்டா டேட்டா என தரவுகளின், தகவல்களின் பின்னால் இல்லையில்லை முன்னால் ஓடிக்கொண்டு இருக்கிறது.
உலகோடு ஒட்ட ஒழுகல் என்கிற தமிழ் முதுமொழிக்கு ஏற்ப, இந்த அரசாங்கமும் அதை சரியாகவே கையில் எடுத்திருக்கிறது. “துல்லியமான புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும் என்று இந்த அரசாங்கம் நம்புகிறது. ..... இவ்வாறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முடிவெடுப்பது பொதுமக்களின் பார்வையில் அரசு செயல்பாட்டின் வெளிப்படைத் தன்மையையும் உயர்த்தும். பன்னாட்டு...” என்கிறது ஆளுநர் உரையின் 27ஆவது குறிப்பு.
(தொடரும்)