Cowin Tamil | கோவின் தளத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு : எழும் கண்டனக் குரல்கள்
தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக முன்பதிவு செய்யும் மத்திய அரசின் கோவின் இணைய தளத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினரும், தமிழ் ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்பட அனைவரும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மத்திய அரசு கோவின் என்ற இணையதளத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இருந்த இந்த இணையதளத்தை அனைத்து மாநில மக்களும் பயன்படுத்தும் வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகளிலும் பதிவு செய்வதற்கு ஏதுவாக மாநில மொழிகளையும் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த சூழலில், இந்த இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, மராத்தி உள்பட 9 மாநில மொழிகளை மத்திய அரசு இன்று புதியதாக இணைத்துள்ளது. ஆனால், இவற்றில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. நாட்டிலே அதிக பாதிப்பை கொண்ட எட்டு மாநிலங்களில் ஒன்றாக உள்ள தமிழ்நாட்டின் தமிழ்மொழி இணைக்கப்படாதது, தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் மொழியை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதவிர,
கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான COWIN ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக 9 மொழிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டுள்ளது.. pic.twitter.com/ATmoLxU9yZ
— tony stark (@tony_staark96) June 4, 2021
கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான COWIN ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக 9 மொழிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. #Cowin #Covid19 pic.twitter.com/A4GhNNIIlm
— Valaipechu J Bismi (@jbismi14) June 4, 2021
COWIN செயலிக்கும் வைரஸ் தொற்று!
— K Kanagaraj (@cpmkanagaraj) June 4, 2021
ஒவ்வொரு வினைக்கும்
அதைவிட பலமடங்கு கூடுதலான
மறுவினையையும் எதிர்வினையையும் உருவாக்கும் தமிழ் புறக்கணிப்பு.
இவ்வாறு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் மொழியை புறக்கணித்திருப்பதற்கு நிச்சயம் எதிர்வினை உண்டாகும் என்றும் ஒருவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும் சிலர் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் மொழிக்கு எதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.