Vivek Death : நட்புனா என்னெனு தெரியுமா... விவேக் கதாபாத்திரத்தில் வரும் உண்மையான மனோகரன் மனம் திறக்கிறார்
Vivek Death : நடிகர் விவேக் தனது கதாபாத்திரத்தில் பயன்படுத்திய பெயர்கள் அனைத்துமே அவரது நண்பர்களுடையது என்கிற தகவல், அவரது கல்லூரி நண்பர் மனோகரின் சிறப்பு பேட்டி மூலம் தெரியவந்துள்ளது. ABP நாடு இணையத்திற்கு மதுரையை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மனோகரன் அளித்த சிறப்பு பேட்டி:
நடிகர் விவேக் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1978-81ம் ஆண்டு பி.காம் பயின்றனர். அவர் அருகில் அமர்ந்து அவருடன் படித்த விவேக்கின் கல்லூரி கால நண்பர் மதுரை மனோகரன் ABP நாடு இணையதளத்திற்கு விவேக் உடனான நினைவுகளை பகிர்கிறார்.
‛‛விவேக் மற்றவங்களுக்கு நடிகர், எனக்கு நண்பர். எனக்கு மட்டுமல்ல எங்க கிளாஸ்ல படிச்ச எல்லோருக்கும் நண்பர். எங்க பேட்ஜ் நண்பர்கள் எல்லோரிடமும் இன்று வரை நட்பில் இருந்தார். எங்கள் வீட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்பார். உதவி என்றாலும் அவர் தான் முதல் ஆளாக வந்து நிற்பார்.
நான் தமிழ் வழி கல்வி கற்றதால் பாடங்கள் எனக்கு சரியா புரியல. விவேக் தான் எனக்கு கத்துக் கொடுப்பார். அவர் சொல்லிக்கொடுத்த பாடம் தான் என்னை வங்கி அதிகாரியாக மாற்றியிருக்கிறது. இன்று நான் ஓய்வு பெற்றிருந்தாலும் அதற்கு முழுக்காரணம் விவேக் தான்.
என்னுடைய மகனின் மருத்துவ படிப்பிற்கு விவேக் நிறைய கெல்ப் பண்ணிருக்கார். இன்று என் குடும்பம் நன்றாக இருக்கிறது என்றால் அதற்கு விவேக் தான் காரணம். ஒவ்வொரு வருசமும் நண்பர்களை ஒருங்கிணைத்து அவர்களுடன் பேசி மகிழ்வதில் விவேக் தவறியதே இல்லை. போன வருசம் கொரோனா வந்ததால நாங்க ஒன்னு சேர முடியல. இந்த வருசம் எப்படி ஏற்பாடு பண்ணுவான், எல்லாரும் ஒன்னு சேருவோம்னு ஆவலா இருந்தேன்...’ ஆனா...(கலங்கினார்)
கல்லூரி காலத்திலேயே கலை மீது அவருக்கு அதிக ஆர்வம் உண்டு. முதல் படத்தில் நடித்துவிட்டு என்னிடம் தான் எப்படி நடித்திருக்கேன் என ஆலோசனை கேட்டார். நான் தான் நகைச்சுவை மட்டும் கூடாது, குணசித்தர வேடங்களும் வேண்டும் என அவரிடம் கூறிக்கொண்டே இருந்தேன். இதை விட முக்கியமான விசயம், என்னோட பெயரை தான் அவர் அதிகம் படங்களில் பயன்படுத்தியிருப்பார்.
மனோகர் என்கிற கதாபாத்திரம் தான் விவேக் அதிகம் ஏற்றிருப்பார். அந்த அளவிற்கு நண்பர்கள் மீது பிரியம் கொண்டவர். மரம் நடுவதில் அவருக்கு அலாதி ஆர்வம். யாரை பார்த்தாலும் மரம் நடுங்கள் என்று தான் பேச்சை தொடங்குவார். 40 ஆண்டுகளாக என்னோட உறவாடிய நண்பன், இப்போது உயிருடன் இல்லை என்பதை எப்படி ஏற்பேன்... இறுதியாக அவனை பார்க்க சென்னை புறப்படுகிறேன், என, கண்ணீருடன் விடைபெற்றார் மனோகரன்.