சென்னை கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனு தாக்கல் நிறுத்தம்..
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நாளை முதல் நேரடி மனுத்தாக்கல் முறை நிறுத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இன்று முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்தாண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கொரோனாவின் தாக்கம் இருந்தபோதும் உச்சநீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் காணொலி காட்சி மூலமாகவே நடைபெற்றது. பின்னர், கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்த பிறகே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் என்று நீதிமன்ற நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த நிலையில், நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் உள்பட சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணைகள் மீண்டும் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வக்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கீழமை நீதிமன்றங்களில் நேரடியாக மனு தாக்கல் செய்யும் முறை நிறுத்தப்படுகிறது. நீதிமன்றங்களுக்கு மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்காக நீதிமன்றத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் மனுக்களை இடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேரடி விசாரணைக்கு, மூன்று நாட்களுக்கு முன் முறையாக விண்ணப்பித்து அனுமதிபெற வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களில் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை அனைத்தும் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்படும். நீதிமன்றத்திற்கு வருவதற்கான முறையான அனுமதி சீட்டு இல்லாமல் யாருக்கும் அனுமதியில்லை. நீதிமன்றத்திற்குள் முறையாக அனுமதி பெற்று உள்ளே வரும் நபர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகள் உள்பட நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்புடையவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். இந்த அறிவிப்புகள் அனைத்தும் நாளை முதல் உடனடியாக சென்னை மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் அமல்படுத்தப்பட உள்ளது என்று நீதிபதி ஆர். செல்வகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோது, இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே அமலில் இருந்தது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10 ஆயிரத்து 986 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில 3 ஆயிரத்து 711 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.