TN Assembly: அக்டோபர் 14-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி காலை 09.30 மணிக்கு தொடங்கும் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு சென்னை ஜார்ஜ் கோட்டையில் இன்று அறிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
சென்னை தலைமை செயலக வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி காலை 09.30 மணிக்கு தொடங்கும் அறிவித்தார். கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த 8 எம்.எல்.ஏக்கள் மற்றும் வால்பாறை எம்.எல்.ஏ ஆகியோருக்கு இரங்கல் தெரிவிப்பு நடைப்பெறும் என்று தெரிவித்தார்.
எத்தனை நாள் கூட்டம்?
2025-26ஆம் நிதியாண்டிற்கான கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைப்பெறும் என்பது அக்டோபர் 14ஆம் தேதிக்கு முன்னதாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பிறகு தான் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி தனது உரையை வாசிக்காமல் சென்றது பரபரப்பை ஏற்ப்படுத்தி இருந்தது. அதன் பின் மார்ச் 14 ஆம் தேதி அரசின் பொது பட்ஜெட் மற்றும் 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யபப்ட்டு பட்ஜெட் மீதான விவாதமும் நான்கு நாட்கள் நடந்தது.
பின்னர் மார்ச் 24 முதல் ஏப்ரல் 29 வரை துறை ரீதியிலாம மானியக்கோரிக்கை விவாதம் நடைப்பெற்றது. 55 துறைகளின் மீதான விவாதம் நடைப்பெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் சட்டமன்ற கூட்டத்தொடரானது ஒத்திவைக்கப்பட்டது. 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்கிற விதியின் கீழ் தற்போது இந்த கூட்டத்தொடரானது நடைப்பெறவுள்ளது.
என்னென்ன எதிர்ப்பார்ப்புகள்:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைப்பெறுவதற்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் இந்த கூட்டத்தொடர் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அரசு சார்பில் புதிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்றப்படாமல் உள்ள தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு வரை எதேனும் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்விகள் எழுப்ப வாய்ப்பு அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது






















