அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
2020ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2020ம் ஆண்டுக்குப் பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்காலிக பணியாளர்கள் நியமனம் ரத்து
பணி வரன்முறை கோரி ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் சத்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த ஒழுங்கு நடவடிக்கை குறித்து மார்ச் 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை தற்காலிக பணி நியமனங்களை கைவிடுவது என 2020ம் ஆண்டு நவம்பர் 298ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஊரகவளர்ச்சித்துறை பதில் அளித்தது.
வழக்கு தொடங்கியது எப்படி?
அரியலூர் மாவட்டம் 1997ம் ஆண்டு ஊரக வளர்ச்சித்துறையில் கணினிப்பிரிவு உதவியாளராக நியமிக்கப்பட்டவர் சத்யா. இவர்தான் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். தன்னுடைய பணி வரன்முறைக்காக அவர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 12 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றம் கேள்வி:
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்காலிக நியமன அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என்று தலைமைச் செயலாளர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வாரா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்த வழக்குதான் நீதிமன்றம் ஆர்.சுப்பிரமணியன், அருள்முருகன் அடங்கிய அமர்வின் முன்பு விசாரைணக்கு வந்தது. இதில், தலைமைச் செயலாளர் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தற்காலிக பணி நியமனங்களை கைவிடுவது என 202ம் ஆணடு நவம்பர் 28ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஊழியர்கள் அதிர்ச்சி:
இதையடுத்து, நீதிபதிகள் 2020ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக பணியாளர்களையும் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை குறித்து வரும் மார்ச் 17ம் தேதி தாக்கல் செய்யும் அறிக்கையுடன், தற்காலிக பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் இந்த உத்தரவால் 2020ம் ஆண்டுக்குப் பின் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை.

