Ramanathapuram: தொடரும் கடத்தலை தடுக்க தனிப்படை: கடத்தல் மாஃபியாக்களுக்கு செக் வைத்த ராமநாதபுரம் எஸ்பி
திருவாடானையில் மணல் கடத்தலை தடுக்க கூடுதலாக சோதனைச்சாவடிகள் திறக்கப்படும். அனைத்து போலீஸ் டேஷன்களிலும் வரவேற்பார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் கடத்தல் சர்வதேச மாஃபியாக்கள், தமிழகத்தில் உள்ள கடத்தல்காரர்களை மையப்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தி அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஹெராயின் ஐஸ் போதைப் பொருள், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு மாற்றாக தங்கத்தை மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக கடத்தி வந்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனங்களுக்கு கொடுப்பது அதிகரித்துள்ளது.
தங்க நகை விற்பனையாளர்களும் இவ்வாறு இலங்கையிலிருந்து கடத்தி வரும் தங்கத்திற்கு வரி மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்டவைகள் செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து சராசரி கிலோ ஒன்றிற்கு ரூ.6 முதல் 10 லட்சம் வரை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
தனூஷ்கோடி, இலங்கைக்கு அருகேயுள்ளதால் மன்னார் வளைகுடா கடல் பகுதி ஆழம் குறைந்த பகுதி என்பதால், சுமார் 2 முதல் 4 மீட்டர் கடல் மட்ட உயரத்தில் செல்லும் திறன் கொண்ட பைபர் படகில் சென்றுவிடலாம். மேலும் அதிகபட்சமாக 45 நிமிடங்களில் இலங்கையை அடைந்து விடலாம் ஆகவே இந்த ஆழம் குறைந்த பகுதியை கடத்தல்காரர்கள் தேர்ந்தெடுப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் இந்திய கடற்படையினரோ அல்லது இலங்கை கடற்படையினரோ கடத்தல் காரர்களை பிடிக்க வாய்ப்பில்லை, இவர்கள் இலங்கை சென்று அங்கு தரையிறங்கும் போது அல்லது தமிழகத்தில் கரைக்கு வரும் போதுதான் கைது செய்யவோ அல்லது கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்யப்படுவது கடத்தல் காரர்களுக்கு ஒரு சாதகமான சூழலாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து நடக்கும் தங்கம், கஞ்சா உள்ளிட்ட கடத்தலை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., 'சந்தீஷ்' அதிரடியாக தெரிவித்துள்ளார்.
திருவாடானை டி.எஸ்.பி., அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்து அவர் கூறுகையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் 165 போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் பயிற்சியில் உள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் பொறுப்பார்கள். மேலும், 210 பேர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணியிடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாடானை சப்டிவிஷனை பொறுத்தவரை பெரிய பிரச்னைகள் இல்லை. குண்டர்கள், ரவுடிகள் குறைவாக உள்ளனர். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையைக் கொண்டது.
இதைப்பயன்படுத்தி, கடத்தல்காரர்கள் நாட்டுப்படகில் தான் தங்கம் கடத்துகின்றனர். கடலோர காவல் படையின் தீவிர கண்காணிப்பையும் மீறி, அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி தொடர்ந்து கடத்தல் சம்பவம் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராமேஸ்வரம் அருகே வேதாளை கடலில் தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்களில் சிலரைப் பிடித்து விசாரித்து வருகிறோம்.ஆனால், தங்கம் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை கூற மறுக்கிறார்கள்.எனவே, தங்கம், கஞ்சா உள்ளிட்ட கடத்தலை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்படும்.
திருவாடானையில் மணல் கடத்தலை தடுக்க கூடுதலாக சோதனைச்சாவடிகள் திறக்கப்படும். அனைத்து போலீஸ் டேஷன்களிலும் வரவேற்பார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புகார் அளிக்க செல்பவர்களை அவர்கள் வரவேற்று குறைகளை கேட்பார்கள். அதுமட்டுமின்றி போலீஸ் குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் புதன் கிழமை மாவட்ட அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.
அது தவிர வாரத்திற்கு இரு முறை கிராமங்களுக்கு சென்று நான் மக்களை நேரில் சந்தித்துகுறைகளை கேட்டு வருகிறேன். இதில் பெரும்பாலானோர் போலீஸ் பிரச்னைகளை கூறுவதில்லை. வருவாய்த்துறை சம்பந்தமான குறைகளை மனுக்களாக தருகின்றனர்.அந்த மனுக்கள் வருவாய்த்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது” எனக்கூறினார்.