Railway Warning: ரயில்களில் பட்டாசு கொண்டுசென்றால் இதுதான் நடக்கும்.. ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை
Railway warning: ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Railway warning: ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்வதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆபத்திற்கு வாய்ப்பு
பட்டாசுகள் எளிதில் தீப்பிடிக்கக் கூடியவை என்பதால் ரயிலில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சிலர் தடையை மீறி பட்டாசுகளைக் கொண்டு செல்கின்றனர். இது, சில நேரங்களில் விபத்தை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது.
தீவிர கண்காணிப்பு
ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், சென்னையில் இருந்து வெளியூர் மற்றும் பிற மாநிலங்களுக்கு ரயில்களில் செல்லும் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதைத் தடுக்கும் விதமாக, சென்னை மாம்பலம், சென்டரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலைய வளாகம், நடைமேடைகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அனுப்பும் பிரிவிலும் தீவர சோதனை நடைபெற்று வருகிறது. ரயில்களில் பயணிகள் கொண்டு வரும் அனைத்துப் பொருள்களையும் சோதனை செய்கின்றனர்.
சிறை தண்டனை
ரயில்களில் பட்டாசு, வெடிபொருள்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி கொண்டு செல்வோருக்கு, ஜாமீனில் வெளிவர பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ராஜையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் மட்டும் 470-க்கும் அதிகமான ரயில்வே போலீசார் இதற்காக பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் 380 ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கோவை, சேலம், சிவகாசி, அரியலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. பைகளில் பட்டாசு வைத்து கொண்டு செல்லும் நபர்களை பிடித்து அவர்களிடம் இருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, வெளியூரில் பட்டாசு வாங்காமல் சொந்த ஊரில் பட்டாசு வாங்குவதே சரியான முறையாக இருக்கும்.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. இதில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில், தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் தென்காசி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், திருநெல்வேலியில் இருந்து பீகார் மாநிலம் தானாப்பூர் ரயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி திருநெல்வேலி - தானாப்பூர் சிறப்பு ரயில் (06190) அக்டோபர் 25 அதிகாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மதுரை, பழனி, கோயம்புத்தூர், சேலம் வழியாக சென்று வியாழக்கிழமைகளில் மதியம் 02.30 மணிக்கு தானப்பூர் சென்று சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.