“வானிலை மையம் நவீனமயமாக இல்லையா; விமர்சனங்கள் புண்படுத்துகிறது” - வானிலை மையம்
இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அது அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பணியாளர்களை புண்படுத்துகிறது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், “சமீபமாக, சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கைகோள் வசதிகள், ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பன்கள் உலகத்தரத்திற்கு ஒப்பானவை. சென்னை மண்டல வானிலை மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக சென்னை வானிலையை கண்காணிக்க இரண்டு டாப்ளர் ரேடார்களும், தென் தமிழகத்தை கண்காணிக்க மூன்று டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் உள்ளன. இதில் X band வகை ரேடார் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும். இந்தியாவில் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை மையத்தில் பணியாற்றுகிறார்கள். உலக வானிலை அமைப்பு இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு மற்றும் முன்னெச்செரிக்கைகளை உலக தரம் வாய்ந்தது என்று பாராட்டியுள்ளது. வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ் மற்றும் மிக்ஜாம் புயல்கள் குறித்து வானிலை மையத்தின் எச்சரிக்கைகள் காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
Press Release from Regional Meteorological Centre, Chennaihttps://t.co/QuMuk0tRm8 pic.twitter.com/W95Dx2Poq6
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 23, 2023
இந்நிலையில், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக, சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள் அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும், நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது. அத்தகைய தவறான விமர்சனங்களை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.