Pamban Bridge: பாம்பன் பாலம் திறப்பு விழா, பிரதமர் மோடி - கடல் மேலே ரயில் பயணம் எப்படி? வீடியோ வைரல்
Pamban Bridge Opening Ceremony: ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

Pamban Bridge Opening Ceremony: ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் மீதான ரயில் பயணம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் பிரதமர் மோடி:
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். இந்த பயணத்தின் போது இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலமான, மிகவும் எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ள புதிய பாம்பன் ரயில் பாலம் உட்பட தமிழ்நாட்டிற்கான பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார். இதனையொட்டி ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பாம்பன் பாலம் திறப்பு விழா:
நண்பகல் 12 மணியளவில், புதிய பாம்பன் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திரறந்து வைத்து, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்வையிட உள்ளார். விழா நடைபெறும் பகுதியிலிருந்து ஒரு ரயில் மற்றும் கப்பலை கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். இந்தப் பாலம் ராமேஸ்வரம் தீவுடன் இந்திய நாட்டின் பிரதான நிலப்பகுதியை இணைக்கிறது மற்றும் கடலோர உள்கட்டமைப்பில் இணைப்பு மற்றும் புதுமையின் நவீன அடையாளமாக நிற்கிறது.
ரூ.550 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த 2.08 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம், அதிநவீன 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த லிப்ட் பொறிமுறையானது 17 மீட்டர் வரை உயர அனுமதிக்கிறது. இது துருப்பிடிக்காத எஃகு கலவைகள், அரிப்பை எதிர்க்கும் பாலிசிலோக்சேன் பெயிண்ட் மற்றும் முழுமையாக பற்றவைக்கப்பட்ட மூட்டுகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த பாலம் நீண்ட கால ஆயுள் மற்றும் குறைந்தபட்ச பராமரிப்பை உறுதி செய்கிறது.
ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல்:
- திறப்பு விழாவிற்குப் பிறகு, பிற்பகல் 12:45 மணியளவில், பிரதமர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்வார்.
- பிற்பகல் 1:30 மணிக்குள், அவர் ரூ.8,300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, முடிந்த பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
- இதில் தமிழ்நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய நெடுஞ்சாலை விரிவாக்கங்கள் உள்ளன. குறிப்பாக NH-40: 28 கி.மீ வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை பாதையின் நான்கு வழிச்சாலை, NH-332: விழுப்புரம்-புதுச்சேரி 29 கி.மீ நான்கு வழிச்சாலை, NH-32: 57 கி.மீ பூண்டியாங்குப்பம்-சட்டநாதபுரம் பிரிவு மற்றும் NH-36: 48 கி.மீ சோழபுரம்-தஞ்சாவூர் பிரிவு சாலை பணிகளும் அடங்கும்.
- இந்த நெடுஞ்சாலைத் திட்டங்கள் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும். சுகாதாரம் மற்றும் கல்விக்கான அணுகலை மேம்படுத்தும். மேலும் உள்ளூர் தொழில்களை - குறிப்பாக விவசாயம், தோல் மற்றும் சிறு அளவிலான நிறுவனங்களை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கூடுதலாக, பிரதமர் ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) ரயில் சேவையைத் தொடங்கி வைப்பார், இது தெற்கு யாத்திரை நகரத்திற்கும் தமிழ்நாட்டின் தலைநகருக்கும் இடையிலான இணைப்பை அதிகரிக்கும்.
Stunning Timelapse of Train Crossing Pamban Bridge 🤩 pic.twitter.com/mj1NwM8ZzB
— Trains of India (@trainwalebhaiya) April 5, 2025
வைரல் வீடியோ:
புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ள நிலையில், கடல் மீதான அந்த பாலத்தின் மீது மேற்கொள்ளப்படும் ரயில் பயணம் எப்படி இருக்கும் என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சோதனை ஓட்டத்தின் போது எடுத்த வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க செய்துள்ளது.






















