பேராவூரணி, திருவையாறு தொகுதிகளை சேர்ந்த திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா
பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ என்.அசோக்குமாருக்கும் திருவையாறு எம்.எல்.ஏ துரை சந்திரசேகருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தஞ்சை மாவட்டத்தில் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை 79360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இரண்டு பேருக்கு ஒமைக்கிரான் பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் இருவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர் .இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ என்.அசோக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இருமல், தொண்டை வலி இருந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர் இரு தினங்களுக்கு முன்பு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொண்டுள்ளார். இதில், ஞாயிற்றுகிழமை மாலை அவருக்கு கொரோனா தொற்று முடிவு பாஸிட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதோடு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார்.
கடந்த இரண்டு தினங்களாக தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தங்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா காரணமாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பேராவூரணியில் நேற்று ஏழை மக்கள் 60 பேருக்கு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார். அசோக்குமார் ஏற்கெனவே இரு தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரனுக்கும் இரு தினங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டு, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவரது குடும்பத்தில் உள்ளவர்கள், தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தொற்று நோய் குறித்து எந்தவித அச்சமின்றி, அரசு வழிகாட்டு நெறி முறைகளை பின் பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும். கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
பஸ்சில் பயணம் செய்பவர்கள் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளுக்கு செல்பவர்கள் என வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும். கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.