டாஸ்மாக் போராட்டத்திற்கு உரிமை உண்டு - சென்னை உயர்நீதிமன்றம்
டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்கள் அதற்கு எதிராக போராட உரிமை உண்டு என்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, போராடியவர்கள் மீதான வழக்கை ரத்து செய்தார்.
கடந்த 2017ம் ஆண்டு சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் பகுதியில் பெண்கள், குழந்தைகள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதுபானக் கடை அமைக்கப்பட்டதை எதிர்த்து போராடியவர்கள், கடையின் மீதும், ஊழியர்கள் மீதும் கல்வீசி தாக்கியதாக அந்த மதுபானக் கடையின் விற்பனையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் 10 பெண்கள் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “வருமானத்தை பெருக்க டாஸ்மாக் கடைகளை அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்றாலும், டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்கள் அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு” என்றார். மேலும், மதுபானக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.