பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா: ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டு அறிக்கை!
‛நாட்டு மக்களிடையே மத இன மோதல்கள் குறைந்து சகோதரத்துவம் வளர, குடும்ப ஆட்சியின் வன்முறை கலாச்சாரம், பொய்ப் பித்தலாட்டம் ஒழிய இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்’
'தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என்று பிரகடனப்படுத்தி, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த உத்தமத் தலைவர் திரு. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்கள் தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். இது போன்று மேலும் பல்வேறு சிறப்புகளுக்குரிய உன்னதத் தலைவரின் 114-வது ஜெயந்தி விழா கொண்டாடப்படும் இவ்வேளையில், அவரது பல்வேறு சிறப்புகளை நினைவுகூர்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
* நெஞ்சத் துணிவில், அரசியல் சிந்தனையில், தீர்க்க தரிசனப் பார்வையில், மாண்புமிக்க மனித நேயப் பண்பில், ஆன்மீகத்தின்பால் கொண்டிருந்த தளராத பக்தியில், ஈடு இணையற்ற தலைவராக சுடர் விட்டவர் தேவர் திருமகனார்.
* ஓர் இயக்கத்தைத் தொடங்கி 10 ஆண்டுகள் கழித்து பெறக்கூடிய பலனை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வைத்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினால் பெற்றுவிடலாம் என்று மூதறிஞர் ராஜாஜி அவர்களே பெருமைபட குறிப்பிட்டிருந்தார். அந்த அளவிற்கு சரித்திர சாதனைகளை சாதித்துக் காட்டியவர்தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார்.
வெள்ளையர் ஏகாதிபத்திய அரசு ரேகை சட்டம் (குற்றப் பரம்பரைச் சட்டம்) என்ற பெயரில் மறவர்கள் மீதும், கள்ளர்கள் மீதும் கடுமையாக இந்தச் சட்டத்தை ஏவியது. இதனை எதிர்த்து குரல் கொடுத்து 17 ஆண்டு காலம் போராடி தமிழகத்தில் கைரேகைச் சட்டத்தை அறவே அகற்றி வெற்றி கண்டவர்தான் தேவர் திருமகனார்.
தேவரின் பிறந்த ஊர் பசும்பொன் ஆகும். இந்த ஊரைப் போன்றே. தேவர் திருமகனார் குணத்திலும் பசும் பொன்னாகத் திகழ்ந்தார். கருணையும், ஈகையும், தியாகமும், தொண்டு உள்ளமும், வீரமும், விவேகமும், எளிமையும் கொண்ட மகத்தான, மறக்க முடியாத தலைவர்தான் தேவர் திருமகனார்.
இந்துத் தாயின் வயிற்றிலே பிறந்து, இஸ்லாமியரின் மடியிலே தவழ்ந்து, கிறிஸ்தவரின் அரவணைப்பிலே கல்வி கற்று வளர்ந்து, இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் வீரத் தளபதியாய் வெற்றிவாகை சூடியவர்தான் தேவர் திருமகனார்.
தளராத நம்பிக்கையை நாளும் வளர்த்திட்ட வீரத் துறவி சுவாமி விவேகானந்தரின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையனை எதிர்க்க அஞ்சாமையும், படை பலமும் வேண்டும் என்று முழக்கமிட்ட சுபாஷ் சந்திரபோஸின் கொள்கையால் கவரப்பட்டு, ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, அறுபடை வீடுகளில் ஆட்சி செய்யும் தமிழக் கடவுள் முருகளின் திருவுருவாகத் திகழ்ந்தவர்தான் தேவர் திருமகனார்.
வாழ்க்கை முழுவதும் நீதிநெறி தவறாமல் வாழ்ந்து, துறவியாக தனிமையில் சுடர்விட்டு, மொழி ஆற்றலில் கர்ஜிக்கும் சிங்கமாய் பவனி வந்து வாரிக் கொடுக்கும் வள்ளல் தன்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கி, பிறருக்கு பரிவு காட்டுவதில் தாயாக, அன்பு செலுத்துவதில் தாதியாக விளங்கி, தொண்டுள்ளத்தோடு மக்கள் பணியற்றிய மனிதாபிமானி தேவர் திருமகனாரின் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறோம். அவரின் மகத்தான பண்பு நலன்களைக் கண்டு போற்றுகிறோம்; வணங்குகிறோம்.
வெள்ளையர் ஆதிக்கத்தை வேரோடு அறுத்து எறிய, மேடைகளிலே தேவர் திருமகனார் முழங்கினார் என்றால், அவரது பேச்சின் நயம் தமிழ் அருவியாய் கொட்டும். அவற்றுள் தேசியம் மாமழையாய் விருந்து படைக்கும். தென்றல் தவழ்ந்து வர, புயல் வேகம் காட்ட, காற்று மரங்களை வேரோடு சாய்க்கும் நிகழ்ச்சியெல்லாம் தேவர் திருமகனாரின் பேச்சின்போது நடக்கும் நிகழ்வுகளாகும்.
ஞானமும், பெருந்தன்மையும், தலைவருக்கே உரிய அபூர்வ பண்பைப் பெற்ற தேவர் பெருமகனார் அவர்கள் பதவிக்காக ஒருபோதும் ஆசைப்பட்டவரே அல்ல. அதைப்பற்றி தேவர் திருமகனார் சொன்னாராம், "ஆளுவதற்கு எனக்கு திறமை இருக்கிறது. ஆனால், அதிகார ஆசை எனக்கு இல்லை” என்று மறுத்த உத்தமர்.
55 ஆண்டுகள்தான் தேவர் திருமகனார் இப்பூவுலகில் வாழ்ந்தார். அதில் பெரும் பகுதி நாட்களை மக்களுக்காக, நாட்டுக்காக சிறையிலே கழித்தார். பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்ட தேவர் திருமகனார். மதுரை, வேலூர், திருச்சி, சென்னை, அலிப்பூர், ராஜமுந்திரி மற்றும் டாமோ ராணுவச் சிறை ஆகிய சிறைகளில் கடும் கொடுமைகளை அனுபவித்தார்.
தேவர் திருமகனார் அவர்களைப் போன்ற எண்ணற்றவர்களின் தியாகத்தால்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் அடைந்தபோது, தேவர் திருமகனார் தீர்க்க தரிசனத்தோடு சொன்னார். எல்லைகளை வரையறுக்காமல் சுதந்திரம் பெறுவது தவறு. இன்று இல்லாவிட்டாலும் நாளை அல்லது நாளை மறுநாள் சீனாவால் நமக்கு ஆபத்து ஏற்படலாம். பாகிஸ்தானுடன் பகைமை வரலாம் என்று அவர் சொன்னவற்றை இங்கு நினைவுகூற விரும்புகிறோம்.
தெளிந்த ஞானமும், தீவிர தேசபக்தியும், கொடை உள்ளமும் கொண்ட தேவர் திருமகனார் அவர்கள் தனக்குச் சொந்தமான 32 கிராமங்களை, நஞ்சை-புஞ்சை நிலங்களை, சாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு தாழ்த்தப்பட்டவர் முதல் அனைத்து வகுப்பினருக்கும் அன்பு பரிசாய் வழங்கிய கருணை உள்ளத்தை நினைத்து, வியந்து போற்றுகிறோம்.
தேவர் திருமகனார் அவர்கள் அடக்கு முறைகளைக் கண்டு அஞ்சாத சிங்கமாய், குணத்திலே சொக்கத் தங்கமாய், ஈகையின் திருவுருவமாய் திகழ்ந்து, மக்கள் மனங்களில் தெய்வமாய் அன்றும், இன்றும், என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
* அரசியலிலும் சரி, ஆன்மிகத்திலும் சரி, இரண்டிலும் சுடர் விட்டு பிரகாசித்தவர் தேவர் திருமகனார். அவர் மக்களுக்கு ஆற்றிய மகத்தான பணிகளை, சேவைகளைப் போற்றும் விதமாகத்தான், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, 1994-ல் சென்னை, நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வெண்கலச் சிலை அமைத்தார்கள்.
இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2010-ஆம் ஆண்டு தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக் காப்பு அளிக்கப்படும் என்று அறிவித்து, 9.2.2014 அன்று 13 கிலோ எடைகொண்ட தங்கக் காப்பை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
* தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா தருணத்தில், மறைந்தும் மறையாமல் தேவர் திருமகனார் பெரும் புகழுடன் மக்களின் இதய சிம்மாசனங்களில் கொலு வீற்றிருக்கும் தலைவராக நம்முன் காட்சி அளிக்கிறார். எதற்கும் அஞ்சாத சிங்கமான தேவர் திருமகனார் அவர்கள் பிறந்ததும் அக்டோபர் மாதம் 30-ஆம் தேதிதான்; மறைந்ததும் அக்டோபர் மாதம் 30-ஆம் தேதிதான் என்று நினைக்கின்றபோது வியப்பே மேலோங்குகிறது.
போற்றுதலுக்குரிய பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்ட மகத்தான தலைவர் தேவர் திருமகனார் அவர்களின் 114-வது ஜெயந்தி விழாவில், தேவர் பெருமகனாரின் கொள்கைகளையும், பெருமைகளையும் போற்றிப் பாதுகாப்பதோடு, தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க, தேசியமும், கலாச்சாரமும் தழைத்தோங்க, நாட்டு மக்களிடையே மத இன மோதல்கள் குறைந்து சகோதரத்துவம் வளர, குடும்ப ஆட்சியின் வன்முறை கலாச்சாரம், பொய்ப் பித்தலாட்டம் ஒழிய இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.