Palanivel thiagarajan : குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம்.. எப்போது அறிவிப்பு? பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அதில், ஆவின் பால் லிட்டருக்கு குறைத்தல், பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், கேஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்டவை இருக்கின்றன.
இதில் மிக முக்கியமானதாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம்தான். திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு மேல் ஆகியுள்ளது. இன்னும் இந்த திட்டத்தை தொடங்கவில்லை என பலராளும் பேசப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளும் பல்வேறு விமர்சனங்களை சொல்லி வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லாமல் இருக்கிறது. அதிமுகவும், பாஜகவும் இந்த திட்டத்தை பற்றி விமர்சிக்காத நாளே இல்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என தெரிந்தே திமுக அரசு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டதாக கருத்துகள் சொல்லப்பட்டு வருகிறது.
அமைச்சர் பதில்
மதுரை ஆரப்பாளையத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி கழிப்பறை, கட்டடங்களை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று திறந்து வைத்தார். அதன்பின், நிரூபர்களுக்கு பேட்டி அளித்த அவர், " பெண்களுக்கு உரிமைத் தொகை தரும் திட்டம் தொடர்பாக கணக்கெடுப்பு பணியானது 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2023-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என கூறியுள்ளார். மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்த நேரத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார்” என்றார்.
இதை தொடர்ந்து பேசிய அவர், ”ஜெயலலிதா அமல்படுத்திய விஷன்-2023 என்ற திட்டம் நல்ல திட்டம். அதனை நாங்களும் பின்பற்ற விரும்புகிறோம். ஜெயலலிதா, கலைஞர் காலத்தில் நிதி நிலைமை சிறப்பாக இருந்தது. ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் போனது மற்றும் அவரது மறைவுக்கு பின்பு 7-8 ஆண்டுகளில் நிதி நிலை மிகவும் மோசம் அடைந்தது" என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், 2025-26 ஆம் நிதியாண்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளது. 2022- 2023 நிதி ஆண்டில் நிதி நிலை சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் படிக்க
TN Ration Shop: ரேஷன் கடைகளில் அரிசிகளுக்கு தனித்தனி ரசீது.. தமிழகத்தில் இன்று முதல் அமல்..!