Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
அமெரிக்காவின் 20 மாகாணங்கள் ஒன்றிணைந்து, அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த ஹெச்1பி விசா கட்டண உயர்வு மற்றும் விசா தொடர்பான புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசா கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதோடு, விசா வழங்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தார் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப். இந்நிலையில், அவரது இந்த செயலுக்கு எதிராக, அமெரிக்காவின் 20 மாகாணங்கள் ஒன்றிணைந்து நீதிமன்னத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
விசாவில் கெடுபிடி காட்டிய ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சமீப காலமாக குடியேற்ற விதிகளில் கெடுபிடி காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஹெச்1பி விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத அளவில் 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தினார். அதாவது, ஹெச்1பி விசாவுக்கான கட்டணத்தை, நான்கரை லட்சம் ரூபாயில் இருந்து, 90 லட்சம் ரூபாயாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிரடியாக உயர்த்தினார்.
அதோடு, அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பை ஹெச்1பி விசா வாயிலாக வெளிநாட்டினர் முறைகேடாக தட்டிப் பறித்து வருவதாகவும் அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார்.
ட்ரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 20 மாகாணங்கள்
இந்த சூழலில், அதிபர் ட்ரம்ப் தன் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டங்களுக்கு புறம்பாக தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது என்று கூறி, விசா கட்டண உயர்வுக்கு எதிராக கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட 20 மாகாணங்கள் அடங்கிய கூட்டமைப்பு, மாசசூசெட்ஸ் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில், 20 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கு தொடர காரணம் என்ன.?
ட்ரம்ப்பின் விசா தொடர்பான உத்தரவுகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள மாகாணங்கள், விசா கட்டண உயர்வால், தங்கள் மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளன. மேலும், சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய பொது சேவைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்குள் ஹெச்1பி விசா வாயிலாக வரும் திறமையான வெளிநாட்டினர், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அதோடு, பல பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், வெளிநாட்டு அறிஞர்களையே பெரிதும் நம்பியுள்ளன. இப்படிப்பட்ட சூழலில், இந்த கட்டண உயர்வால், அந்தந்த நிறுவனங்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளன.
கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரல் கூறுவது என்ன.?
இந்நிலையில், இந்த கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்கம் கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா, ட்ரம்பின் சட்டவிரோதமான புதிய ஹெச்1பி விசா கட்ட ண உயர்வு, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற முக்கியமான துறைகளில் பணியாளர் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும் என்று கூறியுள்ளதோடு, கலிபோர்னியாவின் முக்கியமான சேவைகளை வழங்கும் திறனை ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் கூறியுள்ளார்.




















