TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Election 2026 Reserved Constituencies: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள தனித்தொகுதிகளின் விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Election 2026 Reserved Constituencies: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் ஆட்சி அமைப்பது யார் என்பதை தீர்மானிப்பதில் தனித்தொகுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. திமுக தலைமையிலான ஆளுங்கட்சி கூட்டணி ஒருபுறமிருக்க, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமயிலான மற்றொரு கூட்டணியை வலுவாக்கும் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. இதுபோக நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இப்படி, கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமடைய, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்கள் தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் ஆட்சி அமைப்பது யார் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தனித்தொகுதிகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ்நாட்டில் தனித்தொகுதிகள்:
சட்டமன்றம், நாடாளுமன்றம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தபட்ட அல்லது பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் போட்டியிடும் வகையில் ஒதுக்கப்படும் தொகுதிகளே தனித்தொகுதிகள் என வரையறுக்கப்படுகின்றன. இதன் மூலம் தாழ்த்தபட்ட அல்லது பழங்குடியின மக்களின் முன்னேற்றம் மற்றும் உரிமைகள் உறுதி செய்யப்படும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மொத்தம் 44 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் 42 தொகுதிகள் பட்டியல் சமூக மக்களுக்கும், 2 தொகுதிகள் பழங்குடியின மக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன
சட்டமன்ற தனித்தொகுதிகள் பட்டியல்:
- பொன்னேரி
- பூந்தமல்லி
- திரு-வி-க-நகர்
- எழும்பூர்
- ஸ்ரீபெரும்புதூர்
- செய்யூர்
- மதுராந்தகம்
- அரக்கோணம்
- கீழ்வைத்தியனான்குப்பம்
- குடியாத்தம்
- ஊத்தங்கரை
- அரூர்
- செங்கம்
- வந்தவாசி
- வானூர்
- கள்ளக்குறிச்சி
- கெங்கவல்லி
- ஆத்தூர்
- ராசிபுரம்
- தாராபுரம்
- பவானிசாகர்
- கூடலூர்
- வால்பாறை
- நிலக்கோட்டை
- சோழவந்தான்
- பெரியகுளம்
- கிருஷ்ணராயபுரம்
- துறையூர்
- பெரம்பலூர்
- கந்தர்வகோட்டை
- சீர்காழி
- காட்டுமன்னார்கோவில்
- திட்டக்குடி
- திருவாரூர்
- திருத்துறைப்பூண்டி
- நாகப்பட்டினம்
- மானாமதுரை
- பரமக்குடி
- ஓட்டப்பிடாரம்
- சங்கரன்கோவில்
- வாசுதேவநல்லூர்
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- ஏற்காடு (ST)
- சேந்தமங்கலம் (ST)
2021 சட்டமன்ற தேர்தலில் தனித்தொகுதி முடிவுகள்:
கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விசிக மற்றும் காங்கிரஸ் அடங்கிய திமுக கூட்டணி ஒரு பழங்குடியினருக்கான தொகுதி உட்பட 30 தொகுதிகளை வென்றது. அதேநேரம், அதிமுக தலைமையிலான கூட்டணி வெறும் 14 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றதற்கும் தனித்தொகுதிகளில் பெற்ற அபார வெற்றியும் முக்கிய காரணமாகும்.
பட்டியலின, பழங்குடியின வாக்கு சதவிகிதம்:
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 20 சதவிகித பட்டியலின மக்களும், 1.10 சதவிகிதம் பேர் பழங்குடியின மக்களும் உள்ளனர். கடந்த 14 ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்காத நிலையில், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் தொகை அதிகபட்சமாக 3 முதல் 4 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அதன்மூலம், தனித்தொகுதிகளில் மட்டுமின்றி பொதுத்தொகுதிகளிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பட்டியலின மற்றும் பழங்குடியின வாக்காளர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஜடந்த தேர்தலில் வெறும் 3 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே அதிமுக ஆட்சியை இழந்தது. குறிப்பாக தனித்தொகுதிகளில் 30 இடங்களில் வென்றது திமுக கூட்டணிக்கு பெரும் பலமாக அமைந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் அந்த கூட்டணியில் இருப்பது காரணமாக உள்ளது. எனவே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி தொடருமா? இல்லையா? என்பதையும் இந்த தனித்தொகுதிகள் தான் தீர்மானிக்க உள்ளன.
யாருக்கு சாதகம்?
10 ஆண்டுகளாக நீடித்த அதிமுக ஆட்சியின் மீது இருந்த அதிருப்தி மற்றும் அதிமுகவின் தலைமை மீதிருந்த நம்பிக்கையின்மை ஆகியவற்றால், 2021ம் ஆண்டு தேர்தலில் பெரும்பாலான தனித்தொகுதிகளில் திமுக வெற்றி வாகை சூடியது. அதேநேரம், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை, துப்புரவு பணிகளை தனியார்மயமாக்குவது போன்ற நடவடிக்கைகள் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தேர்தலிலும் எதிரொலிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.





















