EPS On Labour Act: ”மனுஷன் மிஷின் கிடையாது, ஆளுநரிடம் புகார், அண்ணாமலைக்கு நோஸ் கட்” - எடப்பாடி பழனிசாமி
பாஜக உடனான கூட்டணி குறித்து அண்ணாமலை இடமெல்லாம் பேச முடியாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக உடனான கூட்டணி குறித்து அண்ணாமலை இடமெல்லாம் பேச முடியாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் இயந்திரம் இல்லை - ஈபிஎஸ்:
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, தொழிலாளர்களுக்கான வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா தொடர்பாக கேள்வி எழுப்பபப்ட்டது. அதற்கு பதிலளித்த அவர், தொழிலதிபர்களுக்கு தமிழக அரசு அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துவிட்டதாக நான் கருதுகிறேன். 8 மணி நேரம் பணி, 8 மணி நேரம் ஓய்வு மற்றும் 8 மணி நேரம் ஓய்வு என்பது இருந்தால் தான் மனிதர்களால் முறையாக வேலை செய்ய முடியும். இயந்திரம் போன்று சுவிட்ச் போட்டால் மனிதர்கள் ஓடுவார்கள் என நினைத்துவிட்டார்கள். ஆனால் மனிதர்கள் அப்படி கிடையாது. அவர்களால் எப்படி 12 மணி நேரம் பணி செய்ய முடியும். திமுகவின் கூட்டணி கட்சிகளே முதல் முறையாக, சட்டப்பேரவையில் அரசு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த மசோதாவின் ஆழம் என்ன என்பதை அரசு உணர வேண்டும்.
”ஸ்டாலின் பண்பாடே இது தான்”
எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது வேலை நேரம் உயர்த்தப்படுவதை ஸ்டாலின் எதிர்த்தார். ஆளுங்கட்சியாக வந்த பிறகு அவரது நிலைப்பாடு மாறியுள்ளது. இதுதான் ஸ்டாலினின் பண்பாடாக உள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 2 மணி நேரம் சட்டப்பேரவையில் பேசினேன். ஆனால், அது குறித்த செய்திகள் எதுவுமே வெளியிடப்பவில்லை.
ஆளுநரிடம் முறையிடுவோம்:
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டதாக, நிதியமைச்சரே ஒப்புக்கொண்டதாக தான் நான் கருதுகிறேன். இதுதொடர்பாக மத்திய அரசு முழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துவோம், ஆளுநரை நேரில் சந்தித்து முறையிடுவோம். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. 2 ஆண்டுகால ஆட்சியில் கொள்ளை அடிப்பதையே இந்த அரசு செய்துள்ளது.
ஓபிஎஸ்-க்கு எதிர்ப்பு:
ஓபிஎஸ் மாநாடு தொடர்பான விளம்பரங்கள் குறித்து கேட்டபோது, நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எங்கள் தரப்பையே அதிமுக என அங்கீகரித்துள்ள நிலையில், செய்திகளில் ஓபிஎஸ் தரப்பை அதிமுக என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது - ஈபிஎஸ்
அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என அண்ணாமலை கூறுகிறாரே, பாஜக உடன் கூட்டணி தொடர்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அண்ணாமலை குறித்து எல்லாம் என்னிடம் கேட்க வேண்டாம். கூட்டணியை நிர்ணயிக்க கூடியவர்கள் டெல்லியில் உள்ள பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் நட்டா மட்டுமே. மேலே பாஸ் இருக்கும்போது, கீழே இருப்பவர்களிடம் நான் ஏன் பேச வேண்டும். கூட்டணி குறித்து மாநில தலைவர்களிடமெல்லாம் பேச முடியாது” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.