2026 தை திருநாளை கொண்டாடும்போது தீய சக்தி திமுகவை வேரோடு வீட்டிற்கு அனுப்புவோம் - இபிஎஸ் சூளுரை
விவசாயிகள் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகள் நலனுக்காக அதிமுக அரசு கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு.

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த பொங்கல் விழாவில் 108 பெண்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்தனர். இதனை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
பின்னர் பொங்கல் விழாவில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இந்த திருநாள் உழவர்களின் திருநாள். விவசாயிகளோடு சேர்ந்து பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும், 2026 இல் தை திருநாளை கொண்டாடும் போது தீய சக்தி திமுகவை வேரோடு வீட்டிற்கு அனுப்புவோம். அதற்கு முன்னோடி ஆண்டாக இந்தாண்டு பொங்கல் கொண்டாட்டம். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகள் வேளாண் துறையில் சாதனை படைத்து மத்திய அரசின் விருதுகளை பெற்றது அதிமுக ஆட்சியில்தான்.
Happy Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து கொள்ளை புறவழியாக திமுக ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனால் 4 ஆண்டுகளில் திமுக பூஜ்ஜியம் மதிப்பெண் தான் பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு நன்மை இல்லை. அவர்களின் வீட்டு மக்களுக்கு மட்டுமே நன்மை. இதற்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும். அதிமுகவின் நீண்ட கால அழுத்தம் காரணமாகவே தலைவாசல் கால்நடை பூங்காவை முதல்வர் திறந்துள்ளார். மக்கள் மகிழ்ச்சியாக வாழ உணவு உற்பத்தி தேவை என்பதற்காக விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை தந்தது அதிமுக அரசு. விவசாயிகள் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகள் நலனுக்காக அதிமுக அரசு கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு. இந்தியாவிலேயே கிராமத்தில் கூட தரமான சாலை போட்ட ஒரே அரசு தமிழகத்தில் அதிமுக அரசுதான். அதிமுக அரசு கொண்டுவந்த உள் இடஒதுக்கீடு மூலமாகத்தான் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் தற்போது மருத்துவம் படிக்கிறார்கள். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும்" என்று கூறினார்.

