TN Omicron measures: 8 நாட்கள் தனிமை... நிர்வாக இடம்... ஓமிக்ரான் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு!
தென்னாப்பிரிக்கா நாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் எட்டு நாள், நிர்வாக அமைக்கும் இடங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் வகையில், பரிசோதனைக்கான கட்டமைப்பு வசதிகளை தமில்நாடு அரசு வலுப்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் ஒமைக்ரான் தொற்றை 3 மணி நேரத்தில் உறுதி செய்யும் ஆய்வகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த 12 ஆய்வகங்களில் உள்ள Taqpath என்ற தொழில்நுட்பம் மூலமாக செய்யப்படும் முதல்கட்ட பரிசோதனையில் மரபணு மாற்றம் இருப்பது தெரிய வரும். பிறகு, இந்த மாதிரி மரபணு பகுப்பாய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தென் ஆப்பிரிக்காவில், ‘ஒமிக்ரான்’ என்ற மாறுபட்ட கொரோனா வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியிருந்தார். இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்ட நாடுகளை அபாய பிரிவு பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளிடம் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களில் உதவி திட்ட மேலாளர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை நியமித்தது. விமான நிலையங்களில் பரிசோதனை செய்பவர்களுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், " கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த உறுதி செய்ய பரிசோதனை- கண்காணிப்பு - சிகிச்சை - தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது முக்கியம். தென்னாப்பிரிக்கா நாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் எட்டு நாள் நிர்வாக அமைக்கும் இடங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த 2 மாதத்திற்கு முன்பு டி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்ட மரபணு ஆய்வகத்தில், 469 மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 95 % டெல்டா வரைஸ் என கண்டறியப்பட்டது என்றும், தமிழகத்தில் இதுவரை 6,714 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டத்தில், 4,618 முடிவுகள் வந்துள்ள நிலையில் அவைகளில் 96% பேருக்கு டெல்டா வைரஸ் என்று தெரிய வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, மாறுபட்ட கொரோனா வகை தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணிப்பை வலுப்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும், வாசிக்க: