“இங்க இருக்குறதுல ஒன்னு பேய், இன்னொன்னு பிசாசு” - கொந்தளித்த சீமான்
சீமானின் தாயார் அன்னமாள், தங்கள் கிராம மக்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்குமாறு சிவகங்கை இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தில் இருக்கும் கட்சிகளில் ஒன்று பேய் இன்னொன்னு பிசாசு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொந்தளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “எனக்கு இருந்த ஒரே ஒரு பின்புலம் என் தலைவன். அவர் இந்த நிலத்துல யாரு? உங்களை பொறுத்தவரைக்கும் அவர் பயங்கரவாதி, கொலைகாரன். அவரை வைத்துக்கொண்டு இந்த மண்ணில் நின்று நான்கரை லட்சம் வாக்குகள் வாங்கினவன் 8 வருஷத்துல 36 லட்சம் வாங்குகள் வாங்கிருக்கோம். எப்படி? இதை யாரும் பேசமாட்டேங்குறீங்க. ஒரு பைசா கிடையாது. இந்த மண்ணில் தமிழர்கள் தீண்டத் தகாத கூட்டம். துண்டறிக்கை கொடுக்கக்கூட வக்கில்லாத இடத்தில் இருந்து போராடி இந்த இடத்துக்கு வந்திருக்கோம். 10 பேர், 20 பேர் தான் வாக்கு கேட்க போவோம். மொத்த பேரு போறதுக்கு காசு கிடையாது. வேலைக்கு போனாதான் பொண்டாட்டி புள்ளைக்கு சோறு போட முடியும். அந்த நிலைமையிலையும் மாற்று அரசியல் தேடுறான் என் மக்கள். எங்க இருக்கு மாற்று. இங்க இருக்குற ரெண்டு கட்சியும் என்னவா இருக்கு? ஒன்னு சனியன், இன்னொன்னு இழவு. ஒன்னு பேய், இன்னொன்னு பிசாசு. இப்போ தேவதையை முன் வைத்து வாங்க என்று சொல்ல வேண்டி இருக்கு. அதான் இங்க இருக்குற பிரச்சினை” எனத் தெரிவித்தார்.
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னமாள், தங்கள் கிராம மக்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்குமாறு சிவகங்கை இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை வைத்தார். வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பதிலளித்த சீமான், “100 நாள் வேலைத் திட்டத்தால் எங்கள் வீட்டிற்கு வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. என் அம்மா ஒற்றை ஆளாக வேலை செய்கிறார்” எனத் தெரிவித்தார்.