NEET OBC reservation : மருத்துவ படிப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்குவதில் தவறில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
அகில இந்திய பிரிவில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டுடன், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
அகில இந்திய மருத்துவப் படிப்புகளில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவது அனுமதிக்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நடப்பு 2021-22 கல்வி ஆண்டில் இருந்து அனைத்து இளநிலை/முதுநிலை மருத்துவ/பல் மருத்துவ படிப்புகளுக்கும் அகில இந்திய பிரிவில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டுடன், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பல்வேறு கட்சியினர் தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், ‘‘மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை. இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. மத்திய அரசே இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்கலாம். இது குறித்து முடிவெடுக்க ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரைப்படி அடுத்த கல்வியாண்டு முதல் ஓபிசி இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கலாம்” என்று ஆணையிட்டிருந்தது.
அதன்படி அமைக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்தாண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளரிடம் தாக்கல் செய்த பரிந்துரை அறிக்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியமானது தான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், நடப்பாண்டு முதலே இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதில், பதில்மனு தாக்கல் செய்த மத்திய அரசு, கொள்கை முடிவை எடுக்கும் வரை மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது என்று தெரிவித்தது. இதனால் 50% இடஒதுக்கீடு மட்டுமல்லாமல் 27% இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாத இறுதியில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டம் நடைபெற்றது. கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், மருத்துவப் படிப்புகளில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஒபிசி இடஒதுக்கீடு முறையை சரிசெய்ய அக்கறை செலுத்திட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதையொட்டி, ஜூலை 28ம் தேதி, நடப்பு 2021-22 கல்வி ஆண்டில் இருந்து அனைத்து இளநிலை/முதுநிலை மருத்துவ/பல் மருத்துவ படிப்புகளுக்கும் அகில இந்திய பிரிவில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டுடன், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
முன்னதாக , திமுக தரப்பில் தாக்கல் செய்த வழக்கில், மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் எனவும் தமிழகத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களில் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் திமுக தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், அகில இந்திய மருத்துவப் படிப்புகளில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவது அனுமதிக்கத்தக்கது என்று கூறி வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.