(Source: ECI/ABP News/ABP Majha)
Oil Spillage: கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கலந்த விவகாரம்.. சரமாரி கேள்வி கேட்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்..
கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் வரும் செவ்வாய்கிழமை ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து சொசஸ்தலை ஆற்றில் வெளியேறிய எண்ணெய் கசிவு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவு மிதந்து வருகிறது. அப்பகுதியில் இருக்கும் மீன்வர்களின் படகுகளில் கரிய பிசின் போல் இந்த எண்ணெய் ஒட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கொசஸ்தலை ஆறு என்பது மீன்கள் இனப்பெருக்கத்திற்கான முக்கிய ஆதாரம். எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கும் என மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆற்றில் எண்ணெய் திறந்துவிட்ட நிறுவனத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையைல் இந்த வழக்கு இன்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எண்ணெய் கழிவு தெரிந்தே, வேண்டுமென்றே மழைவெள்ள நீரில் கலந்துவிடப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என மாசு கட்டுப்பாடு வாரிய வழக்கறிஞர் குறிப்பிட்டு பேசினார்.
அதற்கு, மணலி தொழிற்பேட்டை சுற்றியுள்ள பகுதிகள், நெடுஞ்சாலைகள், குடியிருப்புகள் முழுவதும் எண்ணெய் கழிவுகளைக் காண முடிகிறது. "Traces of Oil" என்றால் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலை அப்படி இல்லையே என்றும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் TRACES OF OIL என்கிறது, ஆனால் நீர்வளத்துறை அறிக்கை 5 கிலோமீட்டருக்கு பெரும் அளவில் எண்ணெய் கழிவுகள் காணப்பட்டதாக தெரிவிக்கிறது. 5 கிமீ பரவியுள்ள எண்ணெய் கழிவை எப்படி Trace of Oil என மாசு கட்டுப்பாடு வாரியம் கூற முடியும் என மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
அப்போது, "மழைவெள்ள நீரில் எண்ணெய் கலப்பதைத் தடுக்கவும், தேங்கியிருந்த எண்ணெய் கழிவுகளை சேகரிக்கவும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டிருந்தால் உடனடியாக தெரியவந்திருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை. அரசு மேற்கொள்ளும் ஆய்வுக்கு CPCL, IOCL ஒத்துழைக்கும்" என CPCB வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.
அதற்கு, பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களில் கசிவு நடக்கவில்லை, வெறும் தரைப்பகுதியில் இருந்த எண்ணெய் மழைநீரில் கலந்துவிட்டது என நீங்கள் கூறுவது உண்மையெனில் இப்படி நடக்கும் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியாதா என எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் CPCBக்கு தீர்ப்பாயம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும், உண்மை நிலையை அறிய தமிழ் நாடு அரசு ஏன் இன்னும் நிபுணர் குழுவை அமைக்கவில்லை என்றும் மாவட்ட ஆட்சியரும், வருவாய் நிர்வாகமும் என்ன செய்கின்றன என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து, 5 கி.மீ தூரத்திற்கு எண்ணெய் கழிவு கலந்த பிறகுதான் எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த தகவல் தெரிந்தது என்றால் நிறுவனங்களிடம் என்ன பேரிடர் தடுப்பித் திட்டம் இருந்தது என தீர்ப்பாயம் தரப்பில் கேட்கப்பட்டது.
பின், கழிமுகமும், கிராமங்களும் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. விரிவான ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்போம்” என தமிழ் நாடு அரசு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.
அப்போது பேசிய மீனவர்கள் தரப்பு வழக்கறிஞர் யோகேஷ்வரன் எண்ணெயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என நிறுவனங்கள் கூறுவது உண்மை எனில் எண்ணெய் கழிவு எப்படி கடலையும் கடற்கரையும் சென்றடைந்தது என கேள்வி எழுப்பினார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட தீர்ப்பாயம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர் சென்னை மண்டலம், தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குனர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய குழு அமைத்து திங்கட்கிழமை களத்தில் ஆய்வு செய்து செவ்வாய்க்கிழமை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வரும் ஆய்வு அறிக்கையையும் வரும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கு விசாரணை ஒத்திவைத்தது.