Naan Mudhalvan: நான் முதல்வன் பயிற்சி; பல்லியுடன் சுண்டல் விநியோகம்- பேராசிரியர்களுக்கு வாந்தி, மயக்கத்தால் பரபரப்பு!
இதைச் சாப்பிட்ட பேராசிரியர்கள் சிலர், வாந்தி, மயக்கம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் போட்டித் தேர்வு குறித்து மாணவர்களுக்குக் கற்பிக்க, பேராசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிகழ்வில் வழங்கப்பட்ட சுண்டலில் பல்லி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைச் சாப்பிட்ட பேராசிரியர்கள் சிலர், வாந்தி, மயக்கம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்புப் பயிற்சி
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய உதவி பேராசிரியர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில் மூன்றாவது நாளாக, கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கும் பயிற்சியில் அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 100 உதவி பேராசிரியர்கள் பங்கேற்று இருந்தனர்.
சுண்டலில் இறந்து கிடந்த பல்லிகள்
இவர்களுக்கு இன்று வழங்கப்பட்ட சுண்டலில் இரண்டு பல்லிகள் இறந்த நிலையில் கிடந்தன. இதனை அறியாமல் பலரும் சுண்டலை சாப்பிட்ட நிலையில், பத்துக்கும் அதிகமான உதவி பேராசிரியர்கள் மயக்கமுற்று வாந்தி எடுத்து, சரிந்தனர்.

தர்ணா போராட்டம்
பாதிக்கப்பட்ட அனைத்து பேராசிரியர்களுக்கும் சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் தரம் இல்லாத, பல்லி விழுந்த சுண்டலை கொடுத்ததை கண்டித்து, பிற உதவி பேராசிரியர்கள் வளாகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து, நான் முதல்வன் திட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுண்டல் தயாரிக்கப்பட்ட பல்கலைக்கழக உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உணவு மாதிரிகள், ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






















