Montha Cyclone: வேகத்தை குறைத்த ‘மோன்தா‘ புயல்; எப்போது கரையை கடக்கும்.? திருவள்ளூரில் மிக கனமழை - வானிலை அப்டேட்
Montha Cyclone Current Status: மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த ‘மோன்தா‘ புயலின் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது எப்போது கரையை கடக்கும்.? பார்க்கலாம்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘மோன்தா‘ புயல், மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டடிருந்தது. ஆனால், தற்போது புயலின் வேகம் குறைந்து, மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எப்போது கரையை கடக்கும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
வேகத்தை குறைத்த ‘மோன்தா‘ புயல்
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் கடந்த 26-ம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ‘மோன்தா‘ புயலாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. அது, 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மசூலிப்பட்டினத்தில் இருந்து 230 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டிருந்ததாக காலையில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், ‘மோன்தா‘ தீவிர புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மோன்தா புயல் அதன் வேகத்தை குறைத்து, மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 240 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு 320 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எப்போது கரையை கடக்கும்.?
மேலும், ‘மோன்தா‘ புயல், தீவிர புயலாக இன்று மாலை அல்லது இரவுக்குள் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக ஆந்திராவில் மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகம் வரையில் காற்று வீடும் எனவும், பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் எங்கெங்கு கனமழை பெய்யும்.?
இந்த நிலையில், தமிழ்நாட்டில், சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மாலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் மிழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் மிக கனமழை
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, புயல் நகரும் வேகம் குறையக் குறைய, பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த ‘மோன்தா‘ என்ன செய்ய காத்திருக்கிறது என்று பார்ப்போம்.




















