(Source: ECI/ABP News/ABP Majha)
HBD CMSTALIN70 : தந்தையின் வழியில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...பாஜகவை எதிர்த்து தமிழ்நாட்டின் செல்வாக்கை மீட்டெடுப்பாரா?
பிரதமராவதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் நிறுவனர் ஜி.கே. மூப்பனார் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால், அது தோல்வியில் முடிவடைந்தது.
சுமார் 26 ஆண்டுகளுக்கு முன், திருவாரூரில் அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியிடம், ஏன் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், "எனது உயரம் எனக்குத் தெரியும்" என பதில் அளித்தார்.
பின்னர், ஐக்கிய முன்னணி கூட்டணி அரசின் தலைவராக பொறுப்பு வகித்த எச்.டி. தேவகவுடா, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு, பிரதமராவதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் நிறுவனர் ஜி.கே. மூப்பனார் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால், அது தோல்வியில் முடிவடைந்தது.
2014 மக்களவைத் தேர்தலை ‘லேடி வெர்சஸ் மோடி’ போட்டியாக அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மாற்றிய போதிலும், அவரது கட்சி தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 இடங்களில் 38 இடங்களைக் கைப்பற்றிய போதிலும், அவர் வெற்றிபெறவில்லை.
அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய அரசயலில் முக்கிய தலைவராக உருவெடுக்க தொடங்கிவிட்டார். மூப்பனார், ஜெயலலிதா போல அல்லாமல், தனது தந்தையின் வழியையே தேர்வு செய்துள்ளார் ஸ்டாலின். பிரதமர் பதவி பற்றி கவலைப்படாமல், தேசிய அரசியலில் தமிழ்நாட்டின் செல்வாக்கை உயிர்பிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.
தமிழ்நாடு கோலோச்சிய காலம்:
மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கோலோச்சிய காலத்தில் இருந்து தற்போது போதுமான அளவில் கூட மத்திய அமைச்சர் பதவி ஒதுக்கப்படாத சூழல் உருவாகியுள்ளது.
1996ஆம் ஆண்டில் இருந்து 2013ஆம் ஆண்டு வரை, ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகளில் தமிழ்நாட்டு எம்பிக்களின் பங்கு மிக முக்கியமாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே மத்திய அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
குறிப்பாக, திமுகவை சேர்ந்த மறைந்த முரசொலி மாறன், டி.ஆர். பாலு, ஆ. ராசா, மு.க. அழகிரி ஆகியோருக்கு முக்கிய அமைச்சகங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதுவும், மத்திய இணையமைச்சர் பதவி. தற்போது ஒருவர் கூட கிடையாது.
நிர்மலா சீதாராமன், எஸ், ஜெய்சங்கர், எல். முருகன் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிங் மேக்கர் ஸ்டாலின்:
இழந்த தமிழ்நாட்டின் செல்வாக்கை மீட்டெடுக்க களத்தில் இறங்கியிருக்கிறார் ஸ்டாலின். அதற்காக, மத்தியில் பாஜக அரசை தோற்கடிக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதன் முக்கிய முயற்சியாக, கடந்தாண்டு பிப்ரவரி மாதம், நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 30 கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்புக்கு தங்கள் பிரதிநிதிகளை பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஸ்டாலினின் சுயசரிதையான உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பாக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோர் சென்னை வந்திருந்தனர்.
புத்தக வெளியீட்டு விழா நடந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, டெல்லியில் நடந்த திமுக அலுவலக திறப்பு விழாவில் பல்வேறு பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் பிரச்னை என்றால் அது இந்தி திணிப்பு விவகாரம். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் அல்லாமல் இந்தியில் தொடர்பு கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச, இது பெரும் பிரச்னையாக மாறியது. அதற்கு, ஸ்டாலின் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
கேரளா கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்றது, தேசிய அரசியலை நோக்கிய அவரது பயணத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
ஸ்டாலினை நோக்கி படையெடுக்கும் தேசிய தலைவர்கள்:
தேசிய அரசியலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக சென்னையை நோக்கி தேசிய தலைவர்கள் படையெடுத்தார்கள். அதே வழியை பின்பற்றி வரும் ஸ்டாலின், தேசிய அளவில் தடத்தை பதித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். அதற்கு சாட்சியாக, சென்னையை நோக்கி தேசிய தலைவர்கள் மீண்டும் படையெடுப்பதை கூறலாம்.
கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, டிசம்பர் மாதம், தெலங்கானா முதலமைச்சரும் பாரத் ராஷ்டிரிய சமிதி (அப்போது, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி) கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் சென்னைக்கு வந்து, ஸ்டாலினிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், 2022ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், சென்னைக்கு வந்த மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு சென்றார்.
இந்த மாதம் 10ஆம் தேதி, சென்னைக்கு வந்திருந்த மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார்.
பாஜகவுக்கு சவால் விடும் ஸ்டாலின்:
சமூக நீதி, மாநில உரிமை, மொழி, மதச்சார்பின்மை என கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்க்கும் முக்கிய சக்தியாக மு.க. ஸ்டாலின் உள்ளார். நீட், இந்தி திணிப்பு, மதுரை எய்ம்ஸ், தமிழ்நாடு பெயர் சர்ச்சை என எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் நபராக ஸ்டாலின் திகழ்கிறார்.
நீட் பிரச்னையில் சட்ட போராட்டத்தை மேற்கொண்டு, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். கடந்த 18ஆம் தேதி, நீட் விவகாரத்தில், புதிய மனு ஒன்றை தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பையும் கூட்டாட்சி தத்துவத்தையும் நீட் தேர்வு மீறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மூன்று நாள்களுக்கு முன்பு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் கூட, தன்னுடைய ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும். அதுவே தன்னுடைய லட்சியம் என்றும் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்திருந்தார்.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருந்தது.
இதை கண்டித்து அறிக்கை விட்ட முதல் அரசியல் தலைவர் தலைவர் ஸ்டாலின்தான். தமிழ்நாட்டின் சட்டப்பேரவையிலேயே இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை விளக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தியது திமுக.
சமீப காலமாக அரசியலில் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது திமுக கூட்டணி. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவும், 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கோவையில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியாவிடம் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
ஆளுநர் விவகாரத்தில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பாஜகவுக்கு தொடர்ந்து சவால் விடுத்து வருகிறார் ஸ்டாலின். தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கால தாமதம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பினை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து அரசியல் செய்து வரும் ஸ்டாலின், தேசிய அளவில் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ்நாட்டின் செல்வாக்கை மீட்டெடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.