கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
சீமான் வாய்க்கு வந்ததை பேசுவார். அதில் பலனில்லை. தேர்தல் களத்தில் அவர் நிரூபிக்கட்டும். சீண்டல் என்பது வார்த்தையில் அல்ல.
கருணாநிதி சிலையை உடைத்தால் கோடிக்கணக்கான கரங்கள் எப்படி வேடிக்கை பார்க்கும் என சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு “சீமான் வாய் சொல் வீரர் தான். கருணாநிதி உடன் பிறப்பு என்ற ஒரு வார்த்தையால் தூக்கி நிறுத்திய கரங்கள் ஒரு கோடிக்கு மேல் உள்ளது. ஒரு சில லட்சங்களை கொண்ட சீமானின் கரங்கள் சிலையை உடைத்தால் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் கரங்கள் எப்படி பதம் பார்க்கும் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
சீமான் வாய்க்கு வந்ததை பேசுவார். அதில் பலனில்லை. தேர்தல் களத்தில் அவர் நிரூபிக்கட்டும். சீண்டல் என்பது வார்த்தையில் அல்ல. பிரயோகத்தில் இருக்க வேண்டும். எப்படிபட்ட பகை வந்தாலும் அதை தொற்கடிப்போம். அந்த வலிமை பொருந்தியதுதான் திராவிட மாடல் படை” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் சீமானிடம் அரசின் திட்டங்களுக்கு கருணாநிதியின் பெயர் சூட்டுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “புதிய பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு மைதானம், நூலகம் போன்றவற்றிற்கு அடிக்கல் நாட்டுவது அதிமுக. ஆனால் அதை முடித்து திமுக பெயர் வைக்கிறது. கழிப்பிடத்திற்கும் குளிப்பிடத்திற்கும் மட்டும்தான் உங்கள் அப்பா பெயரை வைக்கவில்லை. மீதி எல்லாவற்றிற்கும் கருணாநிதி பெயர்தான் வைக்கப்படுகிறது.
பெயர் வைப்பது தவறில்லை. ஆனால் உங்கள் பணத்தில் வையுங்கள். கருணாநிதி நாட்டை பற்றி சிந்தித்ததாக கூறுகிறீர்கள். ஆனால் அவர் நாட்டை பற்றி சிந்தித்தாரா இல்லை வீட்டை பற்றி சிந்தித்தாரா?
ஆட்சியதிகாரம் நிலையானது என்று நீங்கள் ஆடிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி இப்படியேதான் ஆடிக்கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் பெயரை வைத்திருந்தார். ஆனால் சந்திரபாபு பதவியேற்கும்போது சிலை இடித்து பொட்டலமாக்கிவிட்டனர். அதே நிலை தான் கருணாநிதிக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.