சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசுப் பணி வழங்கப்படும்; அமைச்சர் மெய்யநாதன்
தமிழ்நாட்டில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டு, சர்வதேச அளவில் தமிழ்நாடு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்
ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகியோருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகியோருக்கு அரசு பணி வழங்கப்படும். இவர்களுக்கு அரசு பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்” என்றார். மேலும், தமிழ்நாட்டில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டு, சர்வதேச அளவில் தமிழ்நாடு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
சுபா
பெண்பிள்ளைகளைப் படிக்க வைப்பதே இன்னும் பெருங்கனவாக இருக்கும் தேசத்தில் பொருளாதாரம், சமூகம் என பல தடைகளுக்கு நடுவே அவர்களை விளையாட்டில் பதக்க வேட்டைக்காரிகளாக வளர்ப்பதெல்லாம் போராட்டம் என்ற சொல்லில் கூடப் பொருத்திவிட முடியாது. 2021 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வாகி இருக்கும் 21 வயது திருச்சி பெண் சுபாவிற்கும் அது அப்படியான பாதைதான். இந்த உயரத்தை எட்ட அவர் 8ம் வகுப்பிலிருந்து பயிற்சி ஓட்டத்தில் பயிற்சி எடுக்க வேண்டி இருந்தது. 20 தேசிய அளவிலான போட்டிகள், 8 சர்வதேச அளவிலான போட்டிகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. சர்வதேசப் போட்டிகளில் 3ல் பதக்கம் வென்றிருக்கிறார். கனவுகளை எட்ட ஆண் பெண் அடையாளம் தேவையில்லை, விடாமுயற்சியும் வியர்வை சிந்தும் உழைப்பும்தான் தேவை என்பதற்கு சுபா ஒரு உதாரணம்.
பெடரேஷன் கோப்பைத் தடகளப்போட்டி – தங்கம் வென்ற தமிழச்சி தனலட்சுமி!
தனலட்சுமி
டோக்கியோ தடகள போட்டிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று வீராங்கனைகள் 400 மீட்டர் கலப்பு ரிலே பிரிவில் பங்கேற்க தகுதிப் பெற்றனர். அவர்களில் தனலட்சுமி யார்? எப்படி தடகளத்திற்குள் வந்தார்? திருச்சிக்கு அருகே உள்ள குண்டூர் கிராமத்தில் பிறந்தவர் தனலட்சமி. இவருடைய சிறு வயதிலேயே தந்தையை இவர் இழந்தார். இதனால் இவருடைய தாய் கூலி வேலைகள் செய்து தனலட்சுமி மற்றும் அவருடைய தங்கைகளையும் வளர்த்துள்ளார். வறுமையில் வாடிய தனலட்சுமி முன்னேற்றத்திற்கு விளையாட்டையே ஒரு கருவியாக பார்த்தார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை மங்களூரில் உள்ள அலுவா கல்லூரியில் படித்தார். அங்கு இவர் விளையாட்டு வீராங்கனை என்பதால் உதவி தொகை கிடைத்துள்ளது. இதை வைத்து தனது குடும்பத்திற்கு செலவு செய்துள்ளார்.