பெடரேஷன் கோப்பைத் தடகளப்போட்டி – தங்கம் வென்ற தமிழச்சி தனலட்சுமி!
ஹிமாதாஸ், துத்திசந்த் எனப் பிரபல தடகள முகங்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தனலட்சுமி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஹிமாதாஸ் போட்டியின் தொடக்கத்திலேயே தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 100 மீட்டரை 11:39 நொடிகளில் கடந்து தனிப்பட்ட சாதனையை உருவாக்கியிருக்கிறார் தனலட்சுமி.
இந்த ஆண்டுக்கான பெடரேஷன் கோப்பைத் தடகளப்போட்டிகள் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்துகொண்டிருக்கிறது. பல்வேறு மாநிலத்தின் தடகள வீரர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர்களும் கலந்துகொண்டனர். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கானத் தகுதி நிர்ணயப் போட்டியாகக் கருதப்படும் இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி நேற்று பெண்களுக்கான 100 மீட்டர் இறுதிப்போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
ஹிமாதாஸ், துத்திசந்த் எனப் பிரபல தடகள முகங்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தனலட்சுமி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஹிமாதாஸ் போட்டியின் தொடக்கத்திலேயே தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 100 மீட்டரை 11:39 நொடிகளில் கடந்து தனிப்பட்ட சாதனையை உருவாக்கியிருக்கும் தனலட்சுமி, “தேசிய சீனியர் அளவிலான போட்டிகளில் இது எனக்கு முதல் தங்கம். மேலும் துத்து சந்த், அர்ச்சனா என வலுவான போட்டியாளர்களை எதிர்கொண்டேன். அதனால் இது எனக்கு எப்போதுமே ஸ்பெஷலானதாக இருக்கும். இருந்தும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதியான 11:15களை எட்டமுடியாதது வருத்தமளிக்கிறது என்றாலும் எனது முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் கூடுர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர், தாய் விவசாயக் கூலித் தொழிலாளி. தனலட்சுமியின் பயிற்சியாளர் மணிகண்டன் கூறுகையில், “தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டத்திலும் 200 மீட்டர் தடகளத்திலும் பயிற்சி எடுத்தவர். அவர் 200 மீட்டர் தடகளத்திலும் தடம் பதிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்றார்,
தங்கத்துக்கு வாழ்த்துகள்!