Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
டிட்வா புயல் வலுகுறைந்து சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் திடீரென ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

டிட்வா புயல் தாக்கம்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல் தமிழகத்தை நெருங்கி வரும் போது அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தொடர்ந்து எச்சரிக்கப்பட்டது. ஆனால் ராமநாதபுரம், நாகை மாவட்டத்தில் மட்டும் பலத்த காற்று வீசியது. மழையும் பெரிய அளவில் பெய்யவில்லை. அடுத்தாக வட மாவட்டங்கள் தான் டார்கெட் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த நவம்பர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் சென்னையில் எந்தவித மழைப்பொழிவும் இல்லை. நேற்று சென்னையில் வெயில் தான் அவ்வப்போது தலைக்காட்டியது.
சென்னையை நெருங்கிய புயல் சின்னம்
இந்த நிலையில் நபுயல் "டிட்வா" தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது, சென்னைக் கடற்கரையில் இருந்து சுமார் 50 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கில் நிலை கொண்டுள்ளது. இது சென்னைக் கடற்கரைக்கு அருகே தொடர்ந்து நிலை கொண்டு அடுத்த ஒரிரு நாட்களில் படிப்படியாக முழுமையாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 6 மணி வரை அமைதி காத்து வந்த மழை 7 மணிக்கு பிறகு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. சுமார் 5 மணி நேரமாக சென்னையில் மிதமான மழையானது கொட்டி வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
4 மணி நேரமாக தொடரும் மழை
இந்த நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . நாளை காலை 8 மணி வரை மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள பதிவில், டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது.
சென்னைக்கு 2 நாள் கன மழை
சென்னைக்கு கிழக்கே தென் கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளார், மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.






















