Vaiko vs Thiruma: திமுக கூட்டணியில் குழப்பம்? திருமாவளவன் மீது வருத்தம் தெரிவித்த வைகோ- பரபர பின்னணி!
MDMK Statement: எம்ஜிஆரை தவிர பிற தமிழ்நாட்டு தலைவர்கள் பற்றி விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நம்பிக்கை இழந்துவிட்டதாக திருமாவளவன் கூறியது நியாயம்தானா என மதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில் ஏற்பட்டு வரும் நகர்வுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பும் வண்ணம் அமைந்துள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட தொடங்கிவிட்டது.
பிரபாகரன் விவகாரம்:
எல்லாவற்றுக்கும் தொடக்கப்புள்ளியாக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து நெடுமாறன் கூறிய கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பில் புயலை கிளப்பியிருந்தார். மேலும், இது பிரபாகரன் குடும்பத்தினர் தெரிவித்த தகவல் என்றும் அவர் விரைவில் வெளியே வருவார் என்றும் கூறியிருந்தார்.
பழ. நெடுமாறன் தெரிவித்த கருத்து இந்தியா மட்டும் இன்றி இலங்கையிலும் பெரும் அரசியல் புயலை கிளப்பியது. இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
திருமா பேட்டி:
அதில், பிரபாகரன் தம்மை இலங்கைக்கு அழைத்தது பற்றி விவரித்திருந்தார் திருமாவளவன். குறிப்பாக, அந்தப் பேட்டியில் வைகோவை பிரபாகரன் அழைக்கவில்லை போன்று திருமாவளவன் கூறிவிட்டதாக மதிமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கினர்.
இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை மதிமுக வெளியிட்டுள்ளது. அதில், திருமா மீது வைகோ வருத்தம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொந்தளித்த மதிமுக:
"பேட்டியில் வைகோ பெயரை குறிப்பிட்டு கேட்டபோது, திருமாவளவன் அதை கடந்து சென்ற விதம் வருத்தம் அளிக்கிறது. எம்ஜிஆரை தவிர பிற தமிழ்நாட்டு தலைவர்கள் பற்றி விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நம்பிக்கை இழந்துவிட்டதாக திருமாவளவன் கூறியது நியாயம்தானா.
ஈழத்தமிழர் நலனுக்காக தம் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வைகோ" என மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ராசேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி இருக்கின்றது. இந்த நேர்காணலில் ஈழப்பிரச்சினை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
விடுதலைப் புலிகளை ஆதரித்ததால் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பல இழப்புகளை சந்தித்தவர் வைகோ என்பதை மறுக்க முடியாது. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 577 நாட்கள் வேலூர் வெங்கொடுமை சிறையில் வாடியவர் வைகோ.
பொத்தம் பொதுவாக தமிழ்நாட்டு தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்சனையில் அரசியல் செய்தார்கள் என்று திருமா குறிப்பிடுவது வேதனை தருகிறது" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் குழப்பம்:
திமுக கூட்டணியில் பாமக சேர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், பாஜக, பாமக இடம்பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என திருமா பேசியது திமுகவுக்கு அளிக்கப்பட்ட சமிக்ஞை என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழ்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, மதிமுக கட்சிகளுக்கிடையே பிரச்னை எழுந்துள்ளது. இது, திமுக கூட்டணியில் எதிரொலிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.