மதுரை மக்களின் தலைவலி குறையப் போகிறது.. லட்சிய திட்டம் 90% முடிந்தது தெரியுமா?
மதுரையின் வடக்கு ரிங்ரோடு பணிகள் முடிவடையப்போகிறது, குறையும் மதுரையின் தலைவலி - முழு தலைவலி எப்போ குறையும் தெரியுமா..? - முழுமையாக கட்டுரை வாசிக்கவும்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்கும் முன் முழுமையான அவுட்டர் ரிங்ரோடு பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.
மதுரையில் மாநகரை வட்டமடிக்கும் சாலை
இந்தியாவில் பாரத் மாலா திட்டம் ஒரு லட்சிய திட்டமாக பார்க்கப்படுகிறது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய திருநாட்டில் நெடுஞ்சாலைகளின் வலையமைப்பை உருவாக்குவதற்கும், ஏற்கனவே உள்ள சாலைகளை மேம்படுத்தவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் திண்டுக்கல் நெடுஞ்சாலையையும் - திருச்சி நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் ரிங்ரோடு அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் கிட்டதட்ட 80% முதல் 90% வரையில் நிறைவடைந்து, திறப்பு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மதுரை மாநகரை தொந்தரவு செய்யாத வகையில் வடக்கு - கிழக்கை கவர் செய்யும் வகையில் வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரை சாலைகள் தீவிரமாக போடப்பட்டு வருகிறது. கடந்த 2018-ஆம் திட்டம் தொடர்பான முதற்கட்ட பணிகள் தொடங்கி. 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த திட்டம் முழு வீச்சில் தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் பெரும் பிரச்னை இருந்தது. இப்பகுதி விவசாயிகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கொரோனா, மழை உள்ளிட்ட சோதனைகளை கடந்து தற்போது தான் திட்டம் ஓரளவு முடியும் நிலையை எட்டியுள்ளது.
நெடுஞ்சாலையை நிமிடத்தில் அடையலாம்
இந்த புறவழிச்சாலை நிறைவடைந்துவிட்டால் 30 கிலோ மீட்டர் தூரத்தை 20 முதல் 30 நிமிடத்திற்குள் கடந்து விட முடியும் என சொல்லப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் நத்தம் சாலை, அலங்காநல்லூர் சாலை மற்றும் அழகர்கோயில் சாலை என மதுரை மாநகரை அடைய பல்வேறு வாயிலாக மாறும் எனவும் கூறப்படுகிறது. உயர்மட்ட பாலங்கள் அலங்காநல்லூர், குமலங்கலம், கருவனூர், அழகர்கோயில் ரோடு, சிட்டம்பட்டி என பல இடங்களில் கட்டப்பட்டுள்ளது. இதனால் இது மிகப்பெரும் இணைப்பு சாலையாகும்.
வனவிலங்குகளுக்கு தமிழகத்தில் முதல் மேம்பாலம்
வாடிப்பட்டி அருகே உள்ள வகுத்தமலை பகுதியில் வனவிலங்குகள் செல்லும் வகையில் (animal passover bridge) கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இந்த வனவிலங்கு மேம்பாலம் வடி அமைக்கப்பட்டது. வகுத்தமலை பகுதியில் உள்ள அரியவகை விலங்குகள் காக்கும் வகையில், 210 மீட்டர் இரண்டு மலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக வனவிலங்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி என்பதும் குறிப்பிடத்தக்கது. வடக்கு அவட்டர் ரிங்ரோடு திட்டத்தை மையப்படுத்தி சிட்டம்பட்டி பகுதியில் சென்னை கிளாம்பாக்கம் போல் பேருந்து நிலையம் அமையவுள்ளதாக சொல்லப்படுகிறது.
எய்ம்ஸ்க்கு முன் முழுமையாக அவுட்டர் ரிங் ரோடு முடியவேண்டும்
இந்நிலையில் இது குறித்து (Madurai Infra and Developments)-யின் தலைவர் MID பாலமுருகன் நம்மிடம் பேசினார்..,” பாரத் மாலா திட்டத்தின் கீழ் மதுரை புதுப்பொலிவுபெறும். மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறையும். வாடிப்பட்டி - சிட்டம்பட்டி பணிகள் விரைவில் முடிந்துவிடும். அதே போல் சிட்டம்பட்டி முதல் புதுப்பட்டி வரை போடவுள்ள சாலையின் டி.பி.ஆர்.,டெண்டர் போடப்பட்டுவிட்டது. இந்த டெண்டரை 8 மாதத்தில் முடிக்க வேண்டும். அந்த பணிகள் சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு அடுத்த, அடுத்த கட்டங்களில் சாலை போடும் பணி ஆரம்பித்துவிடும்.
இந்த அவுட்டர் ரிங்ரோடு கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அமையும். அதே போல் மதுரை மேற்கு அவுட்டர் ரிங்ரோடுப் பணியையும் விரைவில் துவங்க வேண்டும். இதனை மாநில அரசுகையாளப் போவதாக சொல்லப்படுகிறது. மதுரை மேற்கு அவுட்டர் ரிங்ரோடு பணியும் இணைந்துவிட்டால் ஒட்டுமொத்த மதுரை மாநகரை சுற்றிவரும்படியான சாலை அமைந்துவிடும். இது மதுரையில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்கும் முன் முழுமையான அவுட்டர் ரிங்ரோடு பணிகளை நிறைவு செய்ய வேண்டும், என எங்கள் அசோசியேசன் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.





















