Lok Sabha Election 2024: நாடாளுமன்றத்தேர்தல் முன்கூட்டியே வரும் - முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
நாடாளுமன்றத்தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்புள்ளது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்புள்ளது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தனது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தனர். அதாவது, திடீரென மத்திய அரசு சிலிண்டர் கேஸ் விலையை குறைத்துள்ளதே? I.N.D.I.A கூட்டணியின் அழுத்தத்தால் இந்த நடவடிக்கையா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வர இருக்கிறது எனவும் அதனால்தான் இந்த திடீர் விலைக்குறைப்பு அரங்கேறுகிறது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையும் குறையும் வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ஆம் கண்டிப்பாக குறையும். பொறுத்திருங்கள். நாடாளுமன்றத்தேர்தல் நெருங்குவதால் அதையும் ஒன்றிய அரசு குறைக்கும் எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஸ் குமார் ஆகியோர் நாடாளுமன்றத்தேர்தல் முன்கூட்டியே வரும் என கூறியிருந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்திருப்பது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பீகார் முதலமைச்சர் நிதிஸ் குமார் சொன்னது என்ன..?
பீகார் முதலமைச்சர் நிதிஸ் குமார் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தெரிவித்ததாவது, “எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜகவுக்கு அதிக இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தில், மத்தியில் உள்ள பாஜக அரசு முன்கூட்டியே மக்களவைத் தேர்தலை நடத்த உள்ளது என்று கடந்த 7-8 மாதங்களாக நான் கூறி வருகிறேன். எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் கட்டாயம் லோக்சபா தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்றார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி:
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த திங்கள்கிழமை லோக்சபா தேர்தலை டிசம்பரில் பாஜக நடத்தக்கூடும் என்று தெரிவித்தார். அது அப்போதே பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, அவர் கூறியதாவது, “தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசம் சர்வதிகார ஆட்சியை எதிர்கொள்ளும். அவர்கள் (பாஜக) 2023 டிசம்பரில் மக்களவைத் தேர்தலை நடத்தலாம் என்று நான் பயப்படுகிறேன். காவி கட்சி ஏற்கனவே நம் நாட்டை மாற்றிவிட்டது. சமூகங்களுக்கிடையில் பகைமை நிறைந்த ஒரு தேசம், அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது நமது நாட்டை வெறுப்பு தேசமாக மாற்றும்” என தெரிவித்தார்.