Appavu: “பெண் கல்வியை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசு” - பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு பெருமிதம்
பெண் கல்வியை ஊக்குவிக்க மாநில அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கல்லூரி விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பெண் கல்வியை ஊக்குவிக்க மாநில அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கல்லூரி விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் அமைந்துள்ள இவா ஸ்டாலின் மேலாண்மை கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார். இந்த பட்டமளிப்பு விழாவில் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஸ்டாலின், இயக்குனர் ஜேனட் இவான்ஜெலின் மேரி, துறை தலைவர் ஜென்சி,பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே வரவேற்புரை ஆற்றிய பேராசிரியர் ஸ்டாலின், மேலாண்மை பட்டப்படிப்பு எனும் எம்பிஏ, தற்போது கல்வி உலகில் மிகவும் முக்கியத்துவம் பெற்று வருவதாகவும், இளங்கலையில் எந்தப் பட்டம் பெற்றாலும், மேலாண்மை எனும் முதுகலைப் பட்டம் சேரும்போது, அவர்களின் திறன்களும் வேலைவாய்ப்புகளும் பன்மடங்கு அதிகரிப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில், தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி, அப்பாவு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, கல்வியில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்று விளங்குவது பெருமிதம் அளிப்பதாகக் கூறினார். ஆனால், தன்னிறைவு பெறுவதற்கு, தமிழக மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், குறிப்பாக, பல்வேறு அரசியல் இயக்கங்கள், அமைப்புகள் எப்படியெல்லாம் பாடுபட்டு, கல்வியில் தன்னிறைவு பெறும் நிலையைக் கொண்டு வந்தனர் என்பதனை வரலாற்றுச் சான்றுகள் மற்றும் நிகழ்வுகளைக் கண் முன் கொண்டு வந்து விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், ஒரு சிறந்த சமூகத்திற்கு பெண் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் சபாநாயகர் அப்பாவு பேசினார். அதுமட்டுமல்லாமல் மாநில அரசின் சிறப்பாக கல்வி பயிற்சி திட்டங்கள் மற்றும் பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதற்கான பல்வேறு திட்டங்களால், இன்று பெண்கல்வி சிறப்பான இடத்தில் இருப்பதாகக்கூறி, அரசினை பாராட்டினார்.
மேலும் மாதம் ஆயிரம் ரூபாய் தரும் புதுமைப்பெண் உள்ளிட்ட பெண் கல்விக்கான அரசின் பல்வேறு திட்டங்களால், இன்றைய அளவில், இந்தியாவிலேயே பெண் கல்வியில் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.