கிராமசபை கூட்டம் நடத்தக்கோரி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார் அமைச்சர் கே.என்.நேரு..!
சென்னை உயர்நீதிமன்றத்தில் கிராமசபை கூட்டங்களை நடத்தக்கோரி தொடர்ந்த வழக்கை அமைச்சர் கே.என்.நேரு வாபஸ் பெற்றார்.
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராமசபை கூட்டம் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்த வேண்டும் என்பது விதி. நாடு முழுவதும் கடந்தாண்டு கொரோனா தொற்று முதல் அலை தாக்கத்தால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. தமிழகத்திலும் கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் இருந்ததால், கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மற்றும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அப்போதைய எதிர்க்கட்சி தி.மு.க. கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும், இதை எதிர்த்தும், கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிடக்கோரியும் தி.மு.க. தரப்பில் அக்கட்சியின் முதன்மை செயலாளர், தற்போதை உள்ளாட்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு பொதுநல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் கடந்த மார்ச் மாதம் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதைய தமிழக அரசு சார்பில், கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராதததால் கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்குள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை என்று கூறினார். மேலும், இந்த வழக்கை தனது மனுதாரர் வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் கூறினார். அமைச்சர் கே.என்.நேரு தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவர் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஆனால், மக்கள் நீதிமய்யம் பொதுச்செயலாளர் மவுரியா தொடர்ந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க : Teachers booked on POCSO Act : சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் மீது பாய்ந்தது போக்சோ!