ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் கிடைத்த பணம் - கவனமாக இருங்கள்
இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்களில் அஜாக்கிரதையாக இருக்காமல், கவனமாக இருக்க வேண்டும் என ஆலோசனையும் வழங்கினார்.
கரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கும், தொலைத்த செல்போன் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், கடந்த எட்டு மாதங்களாக, கரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கும், செல்போனை தொலைத்தவர்களுக்கும் மீட்டு வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் க்ரைம் பிரான்ச் காவல் ஆய்வாளர் அம்சவேணி, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த், காவல் உதவி ஆய்வாளர் சுதர்சன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், பணத்தை தொலைத்த பொது மக்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஆன்லைனில் பணம் மோசடியில் பணத்தை இழந்த ஏழு பேருக்கு ரூபாய் ஒரு கோடியே 7 லட்சத்து 5 ஆயிரத்து 5 ரூபாய் மதிப்பிலான பணம் மீட்கப்பட்டு, உரியவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.
அதே போல ரூபாய் 23 லட்சம் மதிப்பிலான 123 செல்போன்களை தொலைத்தவர்களுக்கு, அவர்களது செல்போனை மீட்டு உரியவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் ஒப்படைத்தார். மேலும், இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்களில் அஜாக்கிரதையாக இருக்காமல், கவனமாக இருக்க வேண்டும் என ஆலோசனையும் வழங்கினார்.