கரூர் மாயனூர் கதவணைக்கு படிப்படியாக குறைந்து வரும் நீர்வரத்து
கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. மேட்டூர்அணையில் இருந்து, டெல்டா மாவட்டங்களுக்கு 13 ஆயிரம் கன அடிவரை தண்ணீர் திறக்கப்பட்டது.
கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர்அணையில் இருந்து, டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு, 13 ஆயிரம் கன அடிவரை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால், காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 6,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு வரும், தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது. மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 7, 032 கன அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு, 6,437 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அதில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக காவேரியாற்றில் 5,837 அடி திறக்கப்பட்டுள்ளது. தென்கரை வாய்க்காலில் வினாடிக்கு, 200 கன அடி தண்ணீரும், கீழ்கட்டளை வாய்க்காலில், 400 கன அடிக்கும் தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு, வினாடிக்கு, 296 கன அடியாக தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 60.63 அடியாக இருந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 250 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 440 அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், இரண்டாவது நாளாக மழை பெய்தது. இரவு தொடங்கிய மழைநீடித்தது. மழை நிலவரம் (மி.மீ.,) கரூர் 9.8, கிருஷ்ணராயபுரம், 1, மாயனூர், 4, பாலவிடுதி, 27, மயிலம்பட்டி, 7 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்ட முழுவதும் சரி சராசரியாக, 4.07 மி.மீ., மழை பதிவானது.
மாயனூர் கதவனை பகுதியில் மீன்கள் விற்பனை மும்முரம்
மாயனூர் கதவணை அருகில், மீன் விற்பனை ஜோராக நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இங்கு காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. அந்த நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. ஜிலேபி மீன்கள் அதிகமாக கிடைக்கிறது. கிலோ, 130 வரை விற்பனை செய்யப்பட்டது. கொண்டை மீன்கள் கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனைக்கப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், கிருஷ்ணராயபுரம்,திருக்காம் புலியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.