திக் திக் தேடுதலுக்குப் பின் ‛பக்’ நாயை கண்டுபிடித்த பிரியாணி கடைக்காரர்; தெய்வத்திருமகள் பாணியில் இணைந்தனர்!
தொலைந்துபோன விலையுயர்ந்த நாய் கிடைத்த மகிழ்ச்சியில் சென்ற பிரியாணி கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த நாய்.
நாய்க்குட்டி யாருக்கு சொந்தம்? என இருவருக்கும் இடையே ஏற்பட்ட உரிமை போராட்டத்தில் நன்றி மறவாத அந்த நாய்குட்டி தன்னை வளர்த்த இளைஞரை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு ஓடிவந்து அவர் மீது ஏறிக் கொண்டு பாசத்தை காட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது செல்ல நாயை இளைஞர் மீட்டுச் சென்றார்.
கரூர் மாநகராட்சி பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார். இவர் கரூர் 5 ரோடு பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். சதீஷ்குமார் தனது சகோதரி மகளுக்காக ரூ. 25 ஆயிரம் வரை செலவிட்டு , ஒரு வயது உள்ள உயர்ரக வகையான பக் இன நாய் ஒன்றை மயிலாடுதுறையில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வாங்கி வந்தார். அதற்கு ஜோயோ எனவும் பெயர் சூட்டி அக்கா வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.
இதனிடையே அக்கா மகள் படிப்பிற்கு நாய்க்குட்டி இடையூறு செய்வதால் சதீஷ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு ஜோயோவை கொண்டு வந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தங்களது பிரியாணி கடைக்கு ஜோயவை கூட்டிச்சென்றுள்ளார்.
கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஜோயோவை வாகனத்தில் உட்கார வைத்துவிட்டு, கடைக்குள் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தில் இருந்த ஜோயோவை காணவில்லை. அருகில் தேடியும் எங்கேயும் இல்லாத காரணத்தால், அருகே உள்ள சிசிடிவி கேமராக்களில் பார்த்தும் ஜோயோ திருடிய நபர்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடியவில்லை.
சோர்ந்து போகாத சதீஷ்குமார் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது நாய் மாயமானது குறித்தும், தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் தரப்படும் என அறிவித்தார். தனது நண்பர்கள் மூலமும் அந்த பதிவினை அனுப்பி அதை பகிரவும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் நேற்றிரவு கரூர் செங்குந்தபுரம் பகுதியிலுள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் ஜோயோ இருப்பதாக சதீஷின் நண்பரொருவர் வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற சதீஷ்குமார், நாயை வைத்திருந்த ஜவுளி நிறுவன உரிமையாளரிடம் பேசி தனது செல்லப் நாய்க்குட்டியை திரும்பத்தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், ஜவுளி நிறுவன உரிமையாளரோ, தான் பணம் கொடுத்து அந்த நாயை வாங்கியதாக கூறி கொடுக்க மறுத்தார்.
இதனிடையே, நன்றி மறவாத அந்த ஜீவன் தனது உரிமையாளர் சதீஷ்குமாரை பார்த்தவுடன் வாலை ஆட்டிக் கொண்டு சந்தோசத்துடன் துள்ளி குதித்து ஓடி வந்து கொஞ்சியுள்ளது. இவர்களின் உண்மையான பாசத்தை கண்ட ஜவுளி நிறுவன உரிமையாளர், நாய் அவருடையது தான் என உணர்ந்து, சதீஷ்குமாரிடமே ஜோயவை ஒப்படைத்துள்ளார். தெய்வத்திருமகள் படத்தில், தனது குழந்தையை பாசத்தால் உறுதி செய்யும் விக்ரமின் காட்சியும், இந்த காட்சியும் ஒரே மாதிரி இருந்ததாக பார்த்தவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஒரு வாரத்துக்கு முன்னால் கடத்தப்பட்ட உயர் ரக நாய் ஜோயோ சமூக வலைதள உதவி மட்டுமல்லாது, உண்மையான அன்பினால் மீட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட நாய், ஜவுளி கடைக்காரரிடம் விற்கப்பட்டதும் தெரியவந்தது.