கரூரில் களைகட்டிய கலைத் திருவிழா; ஒயிலாட்டம் ஆடிய மாணவ, மாணவிகள்
கலைத் திருவிழாவில் கும்மி, தனி நடனம், செவ்வியல், நாட்டுப்புற நடனம், தேவராட்டம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி க. பரமத்தி ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா மாணவர்கள் ஒயிலாட்டம் ஆடினர்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி வட்டார அளவில் நடைபெறும் மாணவ, மாணவிகளின் கலைத் திருவிழா நடைபெற்றது. இதில் கும்மி, தனி நடனம், செவ்வியல், நாட்டுப்புற நடனம், தேவராட்டம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கார்த்திக் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இப்போட்டிகளில் 18 நடுநிலை, 3 உயர்நிலை மற்றும் 7 மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பங்கு பெற்று தங்களது கலைத்திறமையை காட்டினர். இப்போட்டியில் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்நிகழ்ச்சியை அனைத்து விழாக் குழு அலுவலர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கலை நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை )மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர் அசோகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதேபோல், கரூரில் மாவட்ட அளவிலான கபாடி போட்டியில் 15 அரசு மற்றும் தனியார் மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் கரூர் வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின கபாடி போட்டிகள் துவக்க விழா வெண்ணைமலை கொங்கு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் துவங்கியது. கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, செயலாளர் விசா சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கபாடி அணிகளின் வீரர்களை அறிமுகம் செய்து வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கொண்ட 15 அணிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் வெற்றி பெறும் முதல் 2 அணிகள் மாநில அளவில் நடைபெறும் முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளது.