கரூரில் முழு வீச்சில் நடக்கும் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி
ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர்களால் பூஜை செய்து தொடங்கப்பட்டது.
கரூர், திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாநகரின் மையப் பகுதியில் தற்போது பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அவற்றை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது கரூர் மாநகர மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வந்தது.
கடந்த திமுக ஆட்சியில் புதிய பஸ் நிலையம் இடம் தேர்வு செய்து கடைசி நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் புதிய பேருந்து நிலையம் மட்டும் பணி கிடப்பில் கிடந்தது. இந்நிலையில் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது அதற்கான கட்டுமான பணிகள் தொடக்க நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள திருமாநிலையூரில் கடந்த மாதம் 3ஆம் தேதி கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர்களால் பூஜை செய்து தொடங்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூமி பூஜை செய்த நாளிலேயே முதற்கட்டமாக ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பஸ் நிலையம் இரண்டடுக்கு நவீன ஜெர்மன் தொழில்நுட்பத்தில் கட்டப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதி கட்டுவதற்காக ஒவ்வொரு பில்டர்களும் சுமார் 10 முதல் 12 அடி வரை ஆழத்திற்கு காங்கிரட் அமைத்து அதிலிருந்து 160 பில்லர்கள் கட்டப்பட உள்ளது.
தற்போது புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வரும் திருமாநிலையூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, இராமநாதபுரம், தென்காசி, நாகர்கோவில், தேனி ஆகிய தென் மாவட்ட மக்களுக்கும், இதேபோல் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் டெல்டா பகுதிகளுக்கும், தமிழகத்தின் மேற்கு பகுதிகளான ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளுக்கும் அனைத்து பகுதிகளுமே புறவழிச் சாலை வழியாக செல்ல முடியும் என்பதால், பயணம் செய்யும் பயணிகளுக்கு நேரம் விரயமாவது தடுக்கப்படும் மற்றும் பாதுகாப்பான பயணம் அமையும்.
கரூர் கலெக்டர் ஆபீஸ், மாவட்ட நீதிமன்றம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கரூர் பழைய பஸ் நிலையம், உழவர் சந்தை ஆகியவற்றிற்கு மிக அருகாமையில் அமைந்த பகுதியாகும். எனவே, இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மிகவும் உகந்த இடமாக கருதப்படுகிறது. தற்போது கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் சுமார் 90 பஸ்கள் வரை நின்று செல்வதற்கு வசதியாகவும், பயணிகள் மேடை மற்றும் பஸ் டிராக் அமைக்கப்பட்டுள்ளது. நடைபெறும் பஸ் நிலைய கட்டுமான பணிகளை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தரணி சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.வேலுச்சாமி, கோடாங்கி பட்டி பழனிச்சாமி, ராயனூர் ராஜேந்திரன் ஆகியோர் பஸ் நிலையம் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். இன்னும் 14 மாதத்திற்குள் கட்டுமானம் முழுமையாக நிறைவு பெற்று பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு விடப்படும் என தெரிகிறது.