Karthi Chidambaram: 'பதவி கொடுத்தால் வேற லெவலில் கட்சி இருக்கும்’ - காங்கிரஸ் தலைவராக விரும்பும் கார்த்தி சிதம்பரம்..!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், அடுத்த தலைவராக யார் வருவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி மீது தனக்கு விருப்பம் இருப்பதாக சிவகங்கை தொகுதி எம்.பி.யும், மூத்த காங்கிரஸ் நிர்வாகியுமான கார்த்தி சிதம்பரம் வெளிப்படையாக தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாநில, தேசிய கட்சிகள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகிறது. இப்படியான நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் பலத்த அதிர்வலைகளை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. பாஜக வடமாநிலங்களில் வளர்ச்சி கண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி தெலங்கானாவில் ஆட்சியை பிடித்தாலும், 3 மாநிலங்களில் தோல்வி அக்கட்சியை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்த காரணமாகியுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், அடுத்த தலைவராக யார் வருவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த பதவிக்கு கார்த்தி சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத ஆகிய 4 பேரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவுடன் கார்த்தி சிதம்பரம் சந்தித்து பேசியுள்ளார்.அப்போது தனக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்றும் அப்படி கொடுத்தால், மீண்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டி வளர்த்து காட்டுவேன் என்று உறுதி அளித்துள்ளார்.
கர்நாடாகா சிவகுமார், தெலுங்கானா ரேவந்த் ரெட்டி போல தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க பாடுபடுவேன் என்றும் அவர் கார்கேவிடம் கூறியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போது காங்கிரஸ் தமிழ்நாட்டில் வயதானவர்களின் கட்சிபோல் ஆகிவிட்டது என்றும் இளைஞர்களை கட்சிக்குள் இழுக்க வேண்டுமென்றால் துடிப்பாக செயல்பட வேண்டிய ஒரு தலைமை தேவை என்பதையும் கார்த்தி சிதம்பரம் கார்க்கேவிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.லோக்சபா தேர்தலில் கடந்த முறையை காட்டிலும் சீட் எண்ணிக்கையை திமுக குறைக்க நினைப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், கார்கேவுடன் கார்த்தி சிதம்பரம் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வட மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கை இழந்து வரும் நிலையில், கர்நாடகா, தெலுங்கானா ஆகியவற்றில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை பயன்படுத்தி, அடுத்ததாக கேரளா, ஆந்திரா, தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியை வளர்க்க ராகுல் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.அதன் அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் அறிவிக்கப்படலாம் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க:Formula 4 Racing: சென்னை கார் பந்தயத்தை காலவரையின்றி ஒத்திவைத்த தமிழ்நாடு அரசு - காரணம் இதுதான்..!