Formula 4 Racing: சென்னை கார் பந்தயத்தை காலவரையின்றி ஒத்திவைத்த தமிழ்நாடு அரசு - காரணம் இதுதான்..!
சென்னை தீவுத்திடலில் நடைபெற இருந்த கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை தீவுத்திடலில் நடைபெற இருந்த கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் நடைபெற உள்ளது. . ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக இந்த கார் பந்தயம் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டது. தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல்முறையாக இரவுப் போட்டியாக சாலை வழியாக நடத்தப்படு கார் பந்தயம் இது என்பதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு கார் பந்தயம் தொடர்பான முன்னேற்பாடுகளை முழு வீச்சில் செய்து வந்தது. இந்த கார் பந்தயத்துக்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் மாநகரம் முழுவதும் வெள்ள நீர் தேங்கியதோடு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. இதன் காரணமாக டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த கார் பந்தயம் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையில் ஒருபக்கம் நிவாரணப்பணிகள் முழு வீச்சில் சென்று கொண்டிருக்க, மறுபுறம் கார் பந்தயத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளியான தகவல் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பந்தயம், புயல் காரணமாக டிசம்பர் 16,17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.